

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி போபர்ஸ் வழக்கில் ஊழல்வாதி என்று பிரதமர் மோடி பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, " போர் முடிந்துவிட்டது, கர்மா காத்திருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி ஆகியோரிடையே வார்த்தை மோதல் வலுத்து வருகிறது. ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அமேதியில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, போபர்ஸ் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஊழல்வாதி நம்பர் ஒன் என்று பேசியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று கருத்து பதிவிட்டுள்ளார். அதில் ,"மோடி ஜி, போர் முடிந்துவிட்டது. உங்களின் கர்மா உங்களுக்காகக் காத்திருக்கிறது. உங்களுடைய உள்ளார்ந்த நம்பிக்கைகள்தான் உங்களை வெளிப்படுத்தும். என்னுடைய தந்தை உங்களைப் பாதுகாக்கமாட்டார். என்னுடைய ஆழ்ந்த அன்பு உங்களிடம் இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் தாக்கு
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பிரதமர் மோடியை கடுமையாகச் சாடியுள்ளார். அதில் அவர் கூறுகையில், " பிரதமர் மோடி அனைத்து மான்பின், மரியாதையின் எல்லைகளையும், வரம்புகளையும் கடந்து கடந்த 1991-ம் ஆண்டு இறந்த ராஜீவ் காந்தியை அவமானப்படுத்தும் வகையில் பேசுகிறார்.
பிரதமர் மோடி எப்போதாவது அனைத்தையும் படித்திருக்கிறாரா? ராஜீவ் காந்தி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை டெல்லி நீதிமன்றம் அடிப்படை ஆதாரமற்றது என்று தள்ளுபடி செய்துவிட்டது உங்களுக்குத் தெரியுமா? டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை என்று முடிவு செய்தது பாஜக அரசுதான்" என ப.சிதம்பரம் தெரிவித்தார்.