

நாட்டில் சரிந்து வரும் பொருளாதார வளர்ச்சியை சரி செய்தல், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் எனும் அடையாளத்தை தக்கவைத்தல், நுகர்வை அதிகரித்தல், அன்னிய முதலீட்டை அதிகப்படுத்துதல் ஆகியவை நாட்டின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன் முன் இருக்கும் முக்கிய சவால்களாகும்.
மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப்பின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் பொறுப்பேற்று 57 பேர் கொண்ட அமைச்சரவை நேற்று பதவி ஏற்றுக்கொண்டது. இதில் நிதிஅமைச்சர் பொறுப்பு நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது.
கடந்த முறை மோடி அரசில் தொடக்கத்தில் வர்த்தகத்துறை அமைச்சராகவும், பின்னர் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் நிர்மலா இருந்தார். இதில் பாதுகாப்புத்துறை எனும் மிகப்பெரிய பொறுப்பு நிர்மலாவுக்கு வழங்கப்பட்டு, நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் அமைச்சர் எனும் பெயரைப் பெற்றார்.
இப்போது, நாட்டின் 2-வது பெண் நிதிஅமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய தேசத்தின் நிதிஅமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமனுக்கு இந்தபதவி நிச்சயமாக சில ஆண்டுகளுக்கு மலர்கிரீடமாக இருக்கப்போவதில்லை.
ஏனென்றால், பொருளாதார பிரச்சினைகளும், சிக்கல்களும் கடந்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி காலத்தில் இருந்து தொடர்ந்து இருந்து வருகிறது.
குறிப்பாக இன்று இரவுக்குள் வெளியாகும் உள்நாட்டு மொத்த உற்பத்தி(ஜிடிபி) குறித்த புள்ளிவிவரமே இந்தியப் பொருளாதாரம் எந்த நிலையில் இருக்கிறது, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை வெளிப்படுத்திவிடும்.
2018-19-ம் ஆண்டின் நான்காம் காலிறுதி மார்ச் மாதத்தோடு முடிந்துவிட்டநிலையில், ஜிடிபி புள்ளிவிவரங்கள் சரிவில்தான் இருக்கும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
நான்காம் காலிறுதியில் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாகச் சரிய வாய்ப்பு உள்ளது, ஆனால், மத்திய புள்ளியல் துறையோ, பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதம் மதிப்பிட்டிருந்தநிலையில், 6.3 சதவீதமாக வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
நாட்டில் மந்தமாக இருக்கும் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த வேண்டிய பொறுப்பு நிர்மலா சீதாராமனுக்கு இருக்கிறது. விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பொதுபட்ஜெட்டில் இந்த மந்தமான சூழலை அகற்றுவதற்கான திட்டங்கள், சலுகைகளையும் அவர் வெளியிட வேண்டிய நிலையில் இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் மத்தியஅரசின் நிதிப்பற்றாக்குறையை சரிக்கட்டும் வகையில் வருவாய் மற்றும் செலவினங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. கடந்த காலங்களில் அதாவது ஜேட்லி இருந்தபோது ஒவ்வொரு ஆண்டு நிதிப்பற்றாக்குறை அரசின் இலக்கை மீறித்தான் சென்றுள்ளது. ஆதலால் அதை கட்டுப்படுத்தும் பொறுப்பு நிர்மலாவுக்கு இருக்கிறது
நிதிப்பற்றாக்குறை, நடப்புக் கணக்குப்பற்றாக்குறை(சிஏடி) அதிகரிக்கும் பட்சத்தில் சர்வதேச தரநிர்ணய மதிப்பீட்டு நிறுவனங்கள் இந்தியச் சந்தையை குறைத்துமதிப்பிட்டால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் வரக்கூடிய முதலீடு பாதிக்கும், இந்திய நிறுவனங்களில் இருந்து வரக்கூடிய முதலீட்டின் அளவும் குறையக்கூடும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்வரையிலான பொருளாதார வளர்ச்சி 6.6சதவீதமாகத்தான் இருந்தது. இது கடந்த 5 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாகும்.
இதைக்காட்டிலும் மிகப்பெரிய கவலை என்பது, உள்நாட்டில் நுகர்வு எதிர்பார்த்த அளவுக்குவேகமெடுக்கவில்லை. சர்வதேச காரணிகளின் தாக்கத்தால் நுகர்வு மந்தமாகி வருகிறது.
ஆதலால், நுகர்வு, முதலீடு, மக்களுக்கான திட்டங்களில் அரசின் செலவு, ஏற்றுமதியை அதிகரிப்பது ஆகியவற்றில் நிர்மலா சீதாராமன் அதிகமாக கவனம் செலுத்தி அதை ஊக்கப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பான எப்ஐசிசிஐ சமீபத்தில் நிதியமைச்சகத்திடம் கூறுகையில், "நாட்டில் குறைந்துவரும் பொருளாதார வளர்ச்சியின் அறிகுறிகள் முதலீட்டு குறைவினால் மட்டும் வரவில்லை, ஏற்றுமதி குறைவினாலும் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நுகர்வுதேவையும் பலவீனமாக இருக்கிறது " எனக் கவலை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை அறிவிப்பதன் மூலம் தொழிலாளர் சந்தையை ஊக்கப்படுத்தி பொருளாதாரத்தை வேகப்படுத்த முடியும்.
பிரதமர் மோடி அரசு 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகும் என்று வாக்குறுதியளித்துள்ளது.அதை நிறைவேற்றுவதற்கு வேளாண் துறைக்கு திட்டங்கள், சலுகைகள் மீது நிர்மலா சீதாராமன் கவனம் செலுத்த வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை 1.5 மடங்கு அதிகப்படுத்துதல் ஆகியவை சவாலாக இருக்கும.
மேலும் வங்கிகளை ஒழுங்குபடுத்துதல், வங்கிகளுக்கு முதலீடுகளை அதிகப்படுத்துவதல், வாராக்கடன்களை கட்டுப்படுத்துதல், திவால்சட்டத்தை பலப்படுத்துவது போன்றவை புதிய நிதியமைச்சர் முன் இருக்கும் சவால்களாகும்.
வரிவிதிப்பைப் பொறுத்தவரை, ஜிஎஸ்டி வரியில் இதுவரை ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுவிட்டன. அதில் பலஅடுக்குகள் இருக்கும் நிலையில், ஜிஎஸ்டி வரியில் சில அடுக்குகளை மட்டும் கொண்டுவருவது, பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவருவது குறித்த கோரிக்கை, புதிய நேர்முக வரி, கார்பரேட் வரிகளை குறைப்பது போன்ற நெருக்கடிகளும் நிர்மலா சீதாராமனுக்கு இருக்கிறது.
இவை அனைத்தையும் எவ்வாறு சமாளித்து வெற்றிகரமான நிதியமைச்சராக நிர்மலா வருவார் என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும்