

பிரதமர் மோடியின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் தேசத்தின் பொருளாதாரம், பாதுகாப்பு தரைமட்டத்துக்கு வந்துவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காட்டமாகத் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமீபத்தில் இரு இந்து புராணக்கதைகள் குறித்து விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து பிரதமர் மோடியும் பேசியிருந்தார்.
இந்நிலையில் சீதாராம் யெச்சூரி இன்று ட்விட்டரில் மத்திய அரசைக் காட்டமாக விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "பிரதமர் மோடி தலைமையிலான அரசில் பல்வேறு திட்டங்கள் செய்யாமல் விடப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை. மக்கள் திட்டங்களுக்கான செலவு குறைக்கப்பட்டுள்ளது. பெரும் முதலாளிகள் நலனுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து ரூ.5.50 லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
விரும்பத்தகாத நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருவதால் மோடி தப்பிக்க முடியாது. தேசத்தின் பொருளாதாரத்தை தரைமட்டத்துக்கு மோடி அரசு கொண்டுவந்துவிட்டது. பண மதிப்பிழப்பு நீக்கம் கொண்டுவந்தால் தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் பணம் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்தும், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல்கள் 176 சதவீதம் அதிகரித்துள்ளது. எல்லையிள் பாகிஸ்தான் தாக்குதல்கல் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 100 சதவீதம் அதிகரித்துள்ளது" என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.