

நாட்டில் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக என்சிஆர்டபிள்யுசி (NCRWC) அளித்த பரிந்துரைகளை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை எனக் கேட்டு மத்திய அ ரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கான தேசிய ஆணையம் அளித்த பரிந்துரைகளின்படி அரசின் மானியங்கள், அரசு பணி, உதவிகள் ஆகியவற்றை ஒருவர் பெறுவதற்கு 2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயே டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். அதில் " நாட்டில் மக்கள் தொகைப் பெருக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்தற்காக நீதிபதி வெங்கடாச்சலய்யா ஆணையத்தின் சார்பில் ஆய்வு 24-வது பிரந்துரைக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த ஆணையத்தின் சார்பில் பல்வேறு பரிந்துரைகள் தரப்பட்டபோதிலும் எதையும் அரசு நடைமுறைப்படுத்தவில்லை.
தேசத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான காற்று, சுகாதாரம், நல்ல தூக்கம், வீட்டு வசதி, வாழ்வாதாரம், கல்வி, ஆகியவற்றை பெற உரிமை இருக்கிறது ஆனால், இவை அனைத்தையும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாமல் யாருக்கும் முழுமையாக வழங்க முடியாது.
மத்திய அரசு என்சிஆர்டபிள்யுசி அளித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை. அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்பவர்களின் வாக்குரிமையை ரத்து செய்தல், தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்தல், சொத்துக்களை முடக்குதல் போன்றவற்றை செய்ய வேண்டும்.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அரசு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மக்களுக்கு அரசு எடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக ஏழைமக்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இது தொடர்பாக சட்ட ஆணையம் அடுத்த 3 மாதங்களில் தயாரித்து அறிக்கை வெளியிட உத்தரவிட வேண்டும். இந்தியாவின் ஒட்டுமொத்த நிலப்பகுதியில் 2 சதவீதம் விவசாய நிலமும், 4 சதவீத குடிநீரும் மட்டுமே இருக்கிறது. ஆனால், உலகில் 20 சதவீத மக்கள் தொகை நம்நாட்டில் இருக்கிறது
சீனாவுடன் ஒப்பிடுமபோது, இந்தியாவின் விவசாய நிலப்பரப்பு மூன்றில் ஒருபகுதிதான். ஆனால், மக்கள்தொகைப் பெருக்கம் மூன்றுமடங்கு அதிகரித்து வருகிறது. குடிநீர் பற்றாக்குறை, வனஅழிப்பு, நிலச்சீர்கேடு, வீடுகள் இல்லாமல் வாழுதல், ஏழ்மை, வேலையின்மை, பசி, ஊட்டச்சத்து குறைவின்மை ஆகியவற்றுக்கு மக்கள் தொகைப்பெருக்கமே காரணம். " எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் நீதிபதி பிரிஜேஷ் சேதி முன் இன்று விசாரணைக்குவந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, செப்டம்பர் 3-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.