

காஷ்மீரின் குல்காம் பகுதியில் பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் பொதுமக்கள் 50 பேர் காயமடைந்தனர். ஒருவர் பலியானார்.
காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான சண்டையில் குல்காம் மற்றும் சோபியன் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர். இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் மூவர் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து குல்காம் எஸ்பி கிரிந்தர் பால் சிங் கூறும்போது, ''குல்காமின் தாஸிபோரா கிராமத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான சண்டையில் நேற்று (மே 29) அதிகாலை சண்டை தொடங்கியது.
இதில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீடு குண்டுவீசித் தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் இதிலிருந்து உடல்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இந்தச் சண்டையை வீதிகளில் நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் திடீரென பாதுகாப்புப் படையினருடன் சண்டையிட ஆரம்பித்தனர். இதைத் தடுக்க பாதுகாப்புப் படையினர், கண்ணீர் புகை குண்டுகளை வீசி நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர். இந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் மூன்று பேர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர்.
இதில் சோபியனின் பத்ரஹாமா பகுதியைச் சேர்ந்த சஜாத் அகமது என்னும் நபர் உயிரிழந்தார். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு மொகமதுபோரா பொது சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
படுகாயமடைந்த 7 பேர் ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீ மகாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்'' என்று தெரிவித்தார்.