Last Updated : 22 May, 2019 11:25 AM

 

Published : 22 May 2019 11:25 AM
Last Updated : 22 May 2019 11:25 AM

48 மாநிலக் கட்சிகளில் 15 கட்சிகள் மட்டுமே நன்கொடை விவரங்கள் தாக்கல்: 60 சதவீதத்தை 3 கட்சிகள் பெற்றன

2017-18-ம் நிதியாண்டில் 48 மாநிலக் கட்சிகளில் 15 கட்சிகள் மட்டுமே நன்கொடை விவரங்களை தாக்கல் செய்துள்ளன என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 1951, பிரிவி29சி(1)ன் கீழ் அரசியல் கட்சிகள் எந்த ஒரு தனிநபரிடம் இருந்தும் ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக ரொக்கமாக நன்கொடை பெற்றால் அந்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். அப்போதுதான் 100 சதவீதம் வரிவிலக்குப் பெற முடியும்.

அந்த வகையில் ஜனநாயகத்துக்கான சீர்த்திருத்த அமைப்பு(ஏடிஆர்), 10 மாநிலக் கட்சிகள் தாங்கள் ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக நன்கொடை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஆம்ஆத்மி கட்சி, சிரோன்மணி அகாலி தளம், திமுக, எஸ்டிஎப், நாகா மக்கள் முன்னணி, மகாராஷ்ட்ரா கோமந்த்க் கட்சி, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, பாமக, என்ஆர் காங்கிரஸ், தேமுதிக ஆகிய கட்சிகள் கணக்கில் எடுக்கப்பட்டன

இதன்படி 48 மாநிலக் கட்சிகள் தாங்கள் ரூ.20 ஆயிரத்துக்கு குறைவாக அல்லது அதிகமாக 2,824 பேரிடம் இருந்து நன்கொடையாக ரூ.54.81 கோடி பெற்றுள்ளனர்.

இதில் 48 மாநிலக் கட்சிகளை ஆய்வு செய்ததில் 15 கட்சிகள் மட்டுமே தாங்கள் பெற்ற நன்கொடை குறித்த விவரங்களை குறித்தநேரத்துக்குள் தாக்கல் செய்திருந்தனர். 16 கட்சிகள் ஒருநாள் முதல் 31 நாட்கள் வரை தாமதமாக அறிக்கையை தாக்கல் செய்தனர்.

அறிக்கை தாக்கல் செய்யாத மாநிலக் கட்சிகளில் முக்கியமானவை அசாம் கன பரிஷத், மிசோ தேசிய முன்னணி, இந்திய தேசிய லோக் தளம் ஆகியவை என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலக் கட்சிகளில் அதிகபட்சமாக ஒடிசாவில் உள்ள பிஜூ ஜனதா தளம் கட்சி அதிகபட்சமாக 6 நன்கொடை மூலம் ரூ.13.04 கோடி நன்கொடை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து கர்நாடகாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 27 நன்கொடைகள் மூலம் ரூ.11.19 கோடி நன்கொடை  பெற்றுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.8.35 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் மாநிலக் கட்சிகள் பெற்ற நன்கொடையில் 59.44 சதவீதம் அதாவது, ரூ.32.58 கோடியை 3 கட்சிகள் பெற்றுள்ளன.

இதில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ரூ.41.6  லட்சம் வெளிநாடுகளில் இருந்து பெற்றுள்ளது. மாநிலக் கட்சிகளில் டெல்லியில் இருந்து ரூ.17.94 கோடியையும், அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் இருந்து ரூ.9.03 கோடியையும், கர்நாடகாவில் இருந்து ரூ.5.19 கோடியையும்  பெற்றுள்ளன.

கடந்த 2016-17 மற்றும் 2017-18-ம் நிதியாண்டுக்கு இடையே ஒய்எஸ்ஆர், டிஆர்எஸ், ஜேடியு, தேமுதிக ஆகிய கட்சிகள் பெற்ற நன்கொடை அளவில் அதிகமான அளவில் சதவீத அடிப்படையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

 ஒய்எஸ்ஆர் கட்சி பெற்ற நன்கொடை 95 சதவீதமும், தேமுதிக 93 சதவீதமும், டிஆர்எஸ் கட்சி 90 சதவீதம், ஜேடியு 87 சதவீதமும் அதிகரித்துள்ளது.

2017-18-ம் ஆண்டில் மாநிலக் கட்சிகள் ரூ.54.81 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளன, இதில் 434 நன்கொடை தாரர்களிடம் இருந்து  ரூ.77.49 லட்சம் ரொக்கமாகப் பெறப்பட்டுள்ளன.

இதில் ரொக்கமாக நன்கொடை பெற்றதில் நாகாலாந்து மக்கள் முன்னணி(என்பிஎப்) கட்சி அதிகபட்சமாக ரூ.65.26 லட்சமும், அதைத் தொடர்ந்து என்ஆர் காங்கிரஸ் ரூ.4.20 லட்சமும், பாமக ரூ.3.81 லட்சமும் நன்கொடை பெற்றுள்ளன.

கார்பரேட் நன்கொடை

கார்ப்பரேட் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூலம் மாநிலக்கட்சிகள் கடந்த 2017-18-ம் ஆண்டில் 148 நிறுவனங்களிடம் இருந்து  ரூ.27.51 கோடி நன்கொடை பெற்றுள்ளனர். 2,647 தனிநபர்களிடம் இருந்து ரூ.26.15 கோடி நன்கொடை பெற்றுள்ளனர்.

தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை 1,361 கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து ரூ.422.04 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளது. 2,772 தனிநபரிடம் இருந்து ரூ.47.12 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x