

பிரதமர் மோடியை புகழ்ந்த கேரள காங்கிரஸ் நிர்வாகி அப்துல்லா குட்டி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா எச்சரித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா குட்டி. முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பியாக இருந்தபோது குஜராத்தில் மோடியின் வளர்ச்சி திட்டங்களை புகழ்ந்ததால் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்எல்ஏ ஆனார். கடந்த தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்பு கிடைக்கவில்லை. எனினும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.
இந்தநிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றியை தொடர்ந்து, அப்துல்லா குட்டி தனது பேஸ்புக் பதிவில் பிரதமர் மோடியை புகழ்ந்து எழுதி உள்ளார். அதில், “மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றி, அவருடைய வழியில் ஆட்சி நடத்தி வருவதால் தான் நரேந்திர மோடியால் தேர்தலில் வெற்றி பெற முடிந்தது. மோடியின் திட்டங்கள் ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது அம்மாநில காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக காங்கிரஸ் ஆலோசனை செய்து வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில் ‘‘பிரதமர் மோடி காந்திய கொள்கைகளை பின்பற்றுவதாக அப்துல்லா குட்டி கூறியுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. அவரிடம் விளக்கம் கோரப்படும். உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.