சீக்கியப் படுகொலை குறித்த காங்கிரஸின் கருத்து செருக்கைக் காட்டுகிறது; இம்முறை 44 சீட் கூடப் பெறமுடியாது: மோடி ஆவேசம்

சீக்கியப் படுகொலை குறித்த காங்கிரஸின் கருத்து செருக்கைக் காட்டுகிறது; இம்முறை 44 சீட் கூடப் பெறமுடியாது: மோடி ஆவேசம்
Updated on
2 min read

சீக்கியப் படுகொலை குறித்த காங்கிரஸின் கருத்து அவர்களின் செருக்கைக் காட்டுவதாகவும் இதனால் இம்முறை 44 சீட்டுகளைக் கூட காங்கிரஸால் பெறமுடியாது என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு பிரதமர் ராஜீவ் காந்தியின் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பாஜக கூறியிருந்தது. இதுகுறித்துக் கருத்து தெரிவித்த காங்கிரஸின் சாம் பித்ரோடா, ''இதுவும் அவர்களின் மற்றொரு பொய். 1984-ல் நடந்தது குறித்து இப்போது என்ன கவலை? கடந்த 5 ஆண்டுகளில் என்ன செய்தீர்களோ அதைப் பற்றிப் பேசுங்கள். 1984-ல் என்ன நடந்ததோ, நடந்துவிட்டது.

நீங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவீர்கள் என்று மக்கள் ஓட்டு போட்டனர். 200 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படும் என்று கூறி வாக்குகளைப் பெற்றீர்கள்.  ஆனால் எதையுமே நீங்கள் செய்யவில்லை. அதனால்தான் இங்குமங்கும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்'' என்று பேசியிருந்தார். இதற்குப் பதிலடி தரும் விதமாக மோடி பேசியுள்ளார்.

ஹரியாணாவின் ரோட்டக் பகுதியில் பாஜக சார்பில் பிரம்மாண்டப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:

''சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் 'நடந்தது நடந்துவிட்டது' என்னும் வார்த்தைகள் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து வந்தது அக்கட்சியின் அகங்காரத்தைக் காண்பிக்கிறது. அவர் (சாம் பித்ரோடா) காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவர்களில் ஒருவர்.

ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏராளமான சீக்கியர்கள் 1984 கலவரத்தின்போது குறிவைத்து அழிக்கப்பட்டனர். ஆனால் இன்று காங்கிரஸ், 'நடந்தது நடந்துவிட்டது' என்று கூறுகிறது.

இது காங்கிரஸின் மனநிலையைப் பிரதிபலிக்கிறது. 'பெரிய மரம் ஒன்று வீழ்ந்தால் பூமி ஆடத்தான் செய்யும்' என்றார் ராஜீவ் காந்தி. சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் குற்றம் சாட்டப்பட கமல் நாத்தை காங்கிரஸ் சார்பில் பஞ்சாப்பின் பொறுப்பாளர் ஆக்கினர். இப்போது மத்தியப் பிரதேசத்தின் முதல்வராகவே ஆக்கிவிட்டனர். எனவே சாம் பித்ரோடாவின் கூற்றை தனிப்பட்ட நபரின் கருத்தாக எடுத்துக் கொள்ளமுடியாது.

இதுமாதிரியான காங்கிரஸின் போக்கால்தான் அப்போது காங்கிரஸ் வெறும் 44 சீட்டுகளைப் பெற்றது. இப்போது இந்திய மக்கள் காங்கிரஸை இன்னும் குறைவான சீட்டுகளையே பெறவைப்பார்கள்.

வளர்ச்சி குறித்துப் பேசி காங்கிரஸால் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் ஆதாரங்களும் புள்ளிவிவரங்களும் தேவைப்படாத பொய்கள் குறித்துப் பேசி காங்கிரஸார் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் பாஜக அப்படியல்ல. நாங்கள் மக்களுக்கு பதில்சொல்லக் கடமைப்பட்டவர்கள். அதனால்தான் அனைத்துப் பிரச்சினைகளையும் மக்களின் முன்னால் பேசுகிறோம்.

நான் தேசியவாதம் தொடர்பாக மட்டுமே பேசுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. நான் முதல் நாளில் இருந்தே சொல்லி வருகிறேன். நாங்கள் 1.5 கோடி ஏழைகளுக்கு வீடுகள் வழங்கியுள்ளோம். 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின்சாரம் அளித்திருக்கிறோம். ஆயுஷ்மான் பாரத், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நெடுஞ்சாலைத் திட்டம் என ஏராளமான திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

இதில் காங்கிரஸுக்கு நான் சவால் விட விரும்புகிறேன். ஆனால் செய்ததைச் சொல்லிக் காட்ட சாதனைகள் தேவை என்பதால், இதுகுறித்து காங்கிரஸால் வாதிடமுடியாது'' என்றார் மோடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in