Published : 09 Sep 2014 02:24 PM
Last Updated : 09 Sep 2014 02:24 PM

காஷ்மீர் வெள்ளத்தில் உயிரிழப்பு 200: இதுவரை 25,000 பேர் மீட்பு; 4 லட்சம் மக்கள் சிக்கித் தவிப்பதாக அச்சம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர் களை மீட்கும் பணி தொடர் கிறது. இன்னும் நான்கு லட்சம் பேர் மீட்கப்படாமல் தவித்து வருகின்றனர்.

வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நகர் மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதியில் மீட்புப் பணியில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

இப்பகுதியில் சுமார் 4 லட்சம் பேர் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.

பஞ்சேரி மற்றும் உதம்பூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 30 பேரின் நிலை என்னவாயிற்று எனத் தெரியவில்லை. அங்கு, ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த மேலும் இரு மீட்புக் குழுவினர் வான்வழியாக அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.

உதம்பூரிலிருந்து 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சிக்கி யிருப்பவர்களின் இடத்தைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ள தாகவும் காவல்துறை டிஐஜி காரிப் தாஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகரில் மேகமூட்டமாகக் காணப்பட்டாலும் மழை பெய்ய வில்லை. அடுத்த நான்கு நாட் களுக்கு மழை பெய்ய வாய்ப் பில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மலையிலிருந்து வரும் சிற்றாறுகள், பருவகால ஆறுகளில் வெள்ளத்தின் அளவு குறைந்து வருகிறது. ஆனால், ஜீலம் நதியில் அபாய அளவை விட அதிகமான அளவுக்கு வெள்ளம் பாய்ந்து வருகிறது.

சேத மதிப்பு

வெள்ள சேத மதிப்பைக் கணக்கிட துணை ஆணையர் களுக்கு உத்தரவிடப்பட்டுள் ளது. ஜம்மு மண்டல ஆணையர் சாந்த் மனு, பூஞ்ச் மற்றும் ரஜவுரி மாவட்டங்களில் வெள்ள சேதத்தை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். பின்னர், நவுஷேரா பகுதியில் வெள்ளத்தில் பேருந்து அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்த 50 பேரின் குடும்பத்தைச் சந்தித்து அரசு சார்பில் ஆறுதல் தெரிவித்தார்.

ஜம்மு பகுதியில் மட்டும் 2,400 வீடுகள் வசிப்பதற்கு லாயக்கற்ற வகையில் சேதமடைந்துள்ளன.

தொலைத்தொடர்பும், சாலை களும் சீரமைக்கப்பட்ட பிறகே, முழுமையான சேத மதிப்பு தெரியவரும். 300 கி.மீ. தொலை வுள்ள ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை பல இடங் களில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த சாலை 6-வது நாளாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்றுள்ள 1,500-க்கும் அதிகமான கனரக வாகனங்கள் தேக்கமடைந்துள்ளன.

25,000 பேர் மீட்பு

முடங்கிய தொலைத்தொடர்பு சேவைகளை மீட்டெடுக்க பிஎஸ்என்எல் போர்க் கால அடிப்படையில் இயங்கி வருகிறது. பாதியளவு சேவை கள் செவ்வாய்க்கிழமை மாலைக் குள் சீரமைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை சுமார் 25,000க்கும் அதிகமானவர்களை ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர்.

வைஷ்ணவதேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடங்கி யுள்ளதால், கடந்த இரு நாட்களில் 25,000-க்கும் அதிகமானோர் கோயிலில் தரிசனம் செய்துள்ளனர்.

மீட்புப் பணியில் கூடுதல் ஹெலிகாப்டர்களும், விமானங் களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நிவாரணப் பொருள்கள், படகுகள், மருந்துப் பொருள்கள், குடிநீர் ஆகியவை போதுமான அளவில் அனுப்பப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவம் உறுதி

ஜம்மு-காஷ்மீரில் பாதிக்கப்பட்டுள்ள கடைசி தனி நபரும் மீட்கப்படும் வரை ராணுவ வீரர்கள் திரும்ப மாட்டார்கள் என, ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சுஹாக் கூறியுள்ளார்.

விமானப்படை சார்பில் 70 படகுகள் திங்கள்கிழமை தரையிறக்கப்பட்டுள்ளன. விமானப் படையைச் சேர்ந்த 52 ஹெலி காப்டர்களும், பயணிகள் விமானமும் 140 முறை பறந்து, 155 டன் எடையுள்ள நிவாரணப் பொருள்களை விநியோகித் துள்ளன.

பாகிஸ்தானியர்கள் மீட்பு

ஒரு அமெரிக்கர் மற்றும் பாகிஸ் தானைச் சேர்ந்த 6 பேரை வடக்கு காஷ்மீர் பகுதியிலிருந்து ராணுவம் மீட்டுள்ளது. அவர்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு பேர், அனுமதி பெற்று காஷ்மீருக்கு வந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம் நிதியுதவி

மகாராஷ்டிர முதல்வர் பிருத்வி ராஜ் சவாண் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு ரூ. 10 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார். மகா ராஷ்டிர மாநில காங்கிரஸ் சார்பில், 20 ரப்பர் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட படகுகள் மீட்புப் பணிக்காக வழங்கப் பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x