Published : 17 May 2019 12:16 PM
Last Updated : 17 May 2019 12:16 PM

‘‘திருமணம் செய்திருந்தால் கணவரை சமாளிப்பது குறித்து மாயாவதிக்கு தெரிந்திருக்கும்’’ - மத்திய அமைச்சர் சர்சைக் கருத்து

அரசியல் சுயநலத்துக்காக மனைவியை கைவிட்டவர் பிரதமர் நரேந்திர மோடி என்று விமர்சித்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருமணம் செய்திருந்தால் கணவரை சமாளிப்பது குறித்து மாயாவதிக்கு தெரிந்திருக்கும் என அவர் கூறியுள்ளார்.

ஆறு கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், 7-வது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர்.

அண்மையில் கூட்டம் ஒன்றில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியதாவது:

திருமணம் செய்த மனைவியை, தனது அரசியல் சுயநலத்துக்காக கைவிட்டவர் மோடி. பெண்களை மதிப்பார் என்று அவரிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்.

பாஜக.வில் உள்ள திருமணமான பெண்கள், தங்கள் கணவன்மார்களை மோடியிடம் அழைத்து செல்லவே அஞ்சுவதாக எனக்கு தெரிய வந்தது. ஏனெனில், தனது மனைவியை கைவிட்டது போல் எங்கே தங்களது கணவன்மார்களையும் பிரித்து விடுவாரோ என்று பாஜகவில் உள்ள பெண்கள் அஞ்சுகின்றனர். எனவே இதுபோன்ற மனிதருக்கு பெண்கள் யாரும் வாக்களிக்க கூடாது.

இவ்வாறு மாயாவதி பேசினார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சுக்கு மத்திய அமைச்சரும், இந்திய குடியரசுக் கட்சித் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்  இதுகுறித்து கூறியதாவது:

பிரதமர் மோடி குறித்தும், அவரது மனைவி குறித்தும் மாயாவதி பேசியது தவறானது. மாயாவதி திருமணம் செய்யாதவர். குடும்பம் என்றால் என்னவென்றே அவருக்கு தெரியாது. திருமணம் செய்திருந்தால் கணவரை எப்படி சமாளிப்பது என்று அவருக்கு தெரிந்திருக்கும். மாயாவதியை நாங்கள் மதிக்கிறோம். அதற்காக அவரின் அவதூறு பேச்சை அனுமதிக்க முடியாது.

இவ்வாறு ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x