Last Updated : 15 May, 2019 03:17 PM

 

Published : 15 May 2019 03:17 PM
Last Updated : 15 May 2019 03:17 PM

தென்மேற்கு பருவமழை 5 நாட்கள் தாமதமாக கேரளாவில் தொடங்கும்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு 5 நாட்கள் தாமதமாக ஜூன் 6-ம் தேதி கேரளாவில் தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் இன்று அறிவித்துள்ளது.

வழக்கமாக ஜூன் 1-ம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும் நிலையில் இந்த முறை 5 நாட்கள் தாமதாக தொடங்குகிறது. தனியார் வானிலை மையமான ஸ்கைமெட் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் பருவமழை 3 நாட்கள் தாமதமாக ஜூன் 4-ம் தேதி தொடங்கும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

2019-ம் ஆண்டு தென் மேற்கு பருவமழை புள்ளியல் ரீதியான பருவநிலை ஆய்வின்படி, கேரளாவில் சற்று தாமதமாகத் தொடங்க வாய்ப்புள்ளது. அதாவது வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்குவதற்கு பதிலாக ஜூன் 6-ம் தேதி தொடங்கும்.

அதேசமயம், தென்கிழக்கு வங்கக்கடலோடு சேர்ந்த அந்தமான் நிகோபர் தீவுகளில் தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சூழல் இருக்கிறது. அதாவது வரும் 18ம் தேதி அல்லது 19-ம் தேதியே தொடங்கக் கூடும் " எனத் தெரிவித்துள்ளது.

பருவமழை தாமதமாகத் தொடங்குவது கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன் கடந்த 2014-ம் ஆண்டில் ஜூன் 5ம் தேதியும், 2015-ம் ஆண்டில் ஜூன் 6-ம் தேதியும், 2016-ம் ஆண்டில் ஜூன் 8-ம் தேதியும் தொடங்கியது.

பருவமழை தாமதமாக தொடங்குவதற்கும், அதனால் மழையளவு குறைவதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை, அதனால் பாதிப்பும் இருக்காது. கடந்த ஆண்டு பருவமழை கேரளாவில் மே 29-ம் தேதி அதாவது 3 நாட்கள் முன்கூட்டியே தொடங்கியது. ஆனால், நாட்டில் சராசரிக்கும் குறைவாகவே மழைபதிவானது.

கடந்த 2017-ம் ஆண்டிலும் கேரளாவில் பருவமழை மே 3-ம் தேதியே தொடங்கியது. ஆனால், ஒட்டுமொத்த மழையளவு 95 சதவீதம் இருந்தது. ஏப்ரல் மாதம் இந்திய வானிலை மையம் வெளியிட்ட முன்கூட்டிய கணிப்பின்படி தென்மேற்கு பருவமழை சரசாரியகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. ஆனால், தனியார் வானிலைமையமான ஸ்கைமெட், மழையளவு சராசரிக்கும் குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x