

மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கழுதை மீது ஏறிவந்த சுயேட்சை வேட்பாளரின் நிலை, கடைசியில் சோதனையாக முடிந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கழுதை மீது ஏறிவந்து மனுத்தாக்கல் செய்ய முயன்ற பிஹாரைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் மீது, விலங்குகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெஹனாபாத்தின் ஹுலாஸ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி பூஷண் சர்மா. 44 வயதான இவர், சுயேட்சையாகப் போட்டியிட முடிவெடுத்தார். அதற்காக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுத்தாக்கல் செய்ய கழுதை மீது ஏறி வந்தார்.
அப்போது சாதாரண மக்களைக் கழுதைகளாக நினைக்கும் அரசியல்வாதிகளுக்குப் பாடம் புகட்டுவதற்காக கழுதை சவாரி செய்ததாகக் கூறினார் சர்மா. ஆனால் இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். ஜெஹனாபாத் சதார் சர்க்கிள் அதிகாரி சுனில் குமார், டவுன் காவல் நிலையத்தில் சர்மா மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய சுனில்குமார், ''விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, கழுதை மீது சவாரி செய்தது அப்பட்டமான விதிமீறல் ஆகும். இதற்காக மணி பூஷண் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவலர்கள் விரைவில் விசாரணையைத் தொடங்குவர்'' என்றார்.
இதைவிட இன்னொரு சோகமும் மணி பூஷணுக்கு நிகழ்ந்துள்ளது. அவரின் மனுத்தாக்கல் விவரங்களைச் சரிபார்த்த அதிகாரிகள் தொழில்நுட்பக் காரணங்களுக்காக பூஷணின் வேட்பு மனுவை நிராகரித்துவிட்டனர்.