Published : 07 May 2019 10:59 AM
Last Updated : 07 May 2019 10:59 AM

தென் மாநிலங்களில் இருந்து பிரதமர்: சந்திரசேகர் ராவ் புதிய திட்டம்; முயற்சி கைகூடுமா?

1996-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு நடந்ததை போல பாஜக, காங்கிரஸ் அல்லாமல் தென் மாநிலங்களைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற இலக்குடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பாஜகவுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து காங்கிரஸ் தேர்தல் களம் கண்டு வருகிறது. தேர்தல் நடைபெறுவதற்குப் பல மாதங்கள் முன்பாகவே, பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை அமைக்கும் முயற்சியை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர் ராவ் தொடங்கினார்.

சந்திரசேகர் ராவ் கருத்துக்கு, மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாசுதீன் ஒவைசி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் போன்றவர்கள் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஸ்டாலின் போன்றவர்களை சந்திரசேகர் ராவ் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முழுமையாக முடிவடையும் முன்பாகவே, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைப்பது தொடர்பான முயற்சிகளை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் மேற்கொண்டுள்ளார். கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர், கேரளா சென்ற அவர், அம்மாநில முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயனை சந்திரசேகர் ராவ் சந்தித்துப் பேசினார். வரும் 13-ம் தேதி அவர் சென்னை வந்து திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்திக்கவும் முடிவு செய்துள்ளார்.

திட்டம் என்ன?

இந்த தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரஸூக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிகிறது. அதுபோன்ற சூழலில் மாநிலக் கட்சிகளை சேர்ந்த ஒருவரை பிரதமர் ஆக்க வேண்டும் என முயற்சி மேற்கொண்டு வருவதாக சந்திரசேகர் ராவ் தெரிவித்து வருகிறார். 1996-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் இதேபோன்ற நிலை ஏற்பட்டது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் தேவகவுடா, குஜ்ரால் போன்றோர் பிரதமர் பதவியில் அமர்ந்தனர். அதேபோன்ற திட்டத்தை முன் வைத்தே தேர்தல் முடிவுகளுக்கு முன்பே சந்திரசேகர் ராவ் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயனை நேற்று அவர் சந்தித்து பேசினார். அப்போது தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவரை பிரதமர் ஆக்குவதே தமது இலக்கு என அவர் கூறியுள்ளார். ஆனால் யார் என்பதை அவர் கூறிவில்லை.

சந்திரசேகர் ராவின் முயற்சி பற்றி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ தேர்தல் முடிவு வெளியான பிறகு கூடி விவாதித்தே பிறகே அடுத்தகட்ட நகர்வு பற்றி கூற முடியும் என பினராயி விஜயன் பதிலளித்துள்ளார்.

தென் மாநிலங்களை பொறுத்தவரை அதிகமாக எம்.பிக்கள் பாஜக, காங்கிரஸ் கட்சிகளை சேராதவர்களாக இருப்பர். எனவே அவர்கள் தேர்வு செய்யும் ஒருவரை பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற கோஷத்தை சந்திரசேகர் ராவ் முன் வைத்துள்ளார். இதற்கு ஆதரவு திரட்டுவதற்காக மாயாவதி, மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ் போன்றவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட சந்திரசேகர் ராவ் திட்டமிட்டுள்ளார்.

சந்திரசேகர் ராவ் மீது சந்தேகம்?

சந்திரசேகர ராவ் மாநிலக்கட்சிகளின் கூட்டணி அமைக்கவே முயற்சிப்பதாக கூறப்பட்டாலும், அவருக்கு பாஜக ஆதரவுடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் அமைக்க விரும்பும் அணி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கே சாதகமாக அமையும் என்றும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் குற்றம் சாட்டினர்.

இதுமட்டுமின்றி சந்திரசேகர் ராவ் மீது அரசியல் ரீதியாக விரோதம் கொண்ட சந்திரபாபு நாயுடு ஒத்துழைப்பு அளிக்க விரும்பவில்லை. காங்கிரஸ் தலைமையில் அமையும் அரசுக்கே ஆதரவு என்பதில் அவர் உறுதியாக உள்ளார். அதுபோலவே தென் மாநிலங்களைச் சேர்ந்த மற்றொரு முக்கிய தலைவரான திமுக தலைவர் ஸ்டாலினும், தேர்தலுக்கு முன்பே ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என்பதை உறுதிபட தெரிவித்து விட்டார். அதனால் அவர் தனது கருத்தில் மாற்றம் கொள்வாரா என்பது உறுதியாக தெரியவில்லை. இதனால் சந்திரசேகர் ராவின் முயற்சி கைகூடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x