

சாத்வி பிரக்யா தாக்கூரை தீவிரவாதத்தில் தள்ளியது ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபி அமைப்புகளே என ம.பி மாநில அமைச்சர் கோவிந்த்சிங் புகார் கூறியுள்ளார்.
இது குறித்து நேற்று போபால் செய்தியாளர்களிடம் பேசிய கோவிந்த்சிங் கூறும்போது, ‘தன் சிறுவயது முதல் ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தவர் பிரக்யா. கல்லூரிக்கு வந்ததும் அவர் சேர்ந்த ஆர்எஸ்எஸ், அதன் மாணவர் அமைப்பான ஏபிவிபியினரால் அவர் தீவிரவாதத்திற்கு தள்ளப்பட்டார்.’ எனத் தெரிவித்தார்.
தன்னுடைய தீவிரவாதப் போக்கிற்கு பிரக்யா காரணம் இல்லை எனவும் தெரிவித்த கோவிந்த்சிங், இந்த இரு அமைப்புகளால் தான் அவரது போக்கு மாறி முஸ்லிம் வெறுப்பு உணர்வு உருவானதாகவும் புகார் தெரிவித்தார்.
பிரக்யாவின் ஊரான மபியின் பிந்த் மாவட்டத்தின் லஹார் எனும் இடத்தை சேர்ந்தவர் இந்த கோவிந்த்சிங். மபி ஆளும் காங்கிரஸ் அமைச்சரான இவர் மீது, விவாதத்திற்கு உரியவற்றை பேசி சர்ச்சையை கிளப்புவதாகப் புகார் உள்ளது.
பிரக்யா குறித்து கோவிந்த்சிங் மேலும் கூறும்போது, ‘கடந்த 2008 ஆம் ஆண்டு வரை பிரக்யா ஒரு நல்ல மதபோதகராகவும், பேச்சாளராகவும் இருந்தார். பிறகு மாலேகாவ்ன் குண்டுவெடிப்பில் அவர் சிக்கியதால் அவரது நிலை மாறியது.’ எனத் தெரிவித்தார்.
மபியின் தலைநகரான போபால் தொகுதியில் மக்களவைக்கு பிரக்யா பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் திகிவிஜய்சிங்கிற்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ளார்.
கடும் போட்டி நிலைவும் போபாலில் பாஜகவின் முன்னாள் முதல்வரான உமா பாரதி, மக்களவை சபாநாயகரான சுமித்ரா மஹாஜன் ஆகியோரும் பிரக்யாவிற்காக வந்து ஆதரவு தெரிவித்ததனர்
பிரச்சாரத்திற்கு தடை
இதனிடையே, மத்திய தேர்தல் ஆணையத்தால் பிரக்யா பிரச்சாரம் செய்ய இன்று முதல் 72 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர், மும்பையில் தீவிரவாதத் தாக்குதலில் பலியான காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே மற்றும் அயோத்தியின் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து தவறாகப் பேசியது காரணம்.