

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஜெயின் சமூகத்தைச் சார்ந்த 12 வயது சிறுமி ஒருவர் இன்று துறவறம் பூணுகிறார்.
குஷி என்ற அந்த சிறுமி, "இந்த உலகில் நாம் அனுபவிக்கும் இன்பங்கள் யாவும் நிலையானவை அல்ல. இந்த உலகமும் நிலையானது அல்ல. அமைதியையும் முக்தியையும் அடைய ஒரே வழி எளிமையான வாழ்வு. அதற்காகவே துறவறம் பூணுகிறேன்.
நான் குழந்தையாக இருந்தபோது என் குடும்பத்திலேயே 4 பேர் இவ்வாறாக துறவறம் ஏற்றதைப் பார்த்திருக்கிறேன். சிமந்தர் சுவாமிஜி கூற்றின்படி ஒருவர் 8 வயதிலேயே உலக இன்பங்களைத் துறக்க வேண்டும். இப்போது எனக்கு 12 வயதாகிவிட்டது. அதனால்தான் நான் இப்போது தீக்ஷை பெற விரும்புகிறேன்" எனக் கூறுகிறார்.
குஷியின் தந்தை வினித் ஷா, அரசு ஊழியர். தனது மகள் துறவறம் பூணுவது குறித்து வினித், இந்த இளம் வயதில் என் மகளுக்கு இப்படி ஓர் உள்ளார்ந்த பார்வை வந்ததில் மகிழ்ச்சி. மற்ற குழந்தைகளுக்கு இது சாதாரணமாகத் தோன்றாது. இது எங்களுக்கு பெருமை தரும் விஷயம். அவர் இனி லட்சக்கணக்கானோர் மீது ஒளியைப் பாய்ச்சுவார் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
அதேபோல் குஷியின் தாயார் பேசும்போதும், என் மகள் மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அவர் துறவறத்தை நாடியிருக்கிறார். இது எனக்கு இன்னமும் பெருமை தருகிறது என்றார்.
குஷி 6-ம் வகுப்பில் 97% மதிப்பெண் பெற்றார். அதன் பின்னர் துறவறத்தாக படிப்பையும் துறந்தார்.