

விமானம் தாங்கி ஐ.என்.எஸ். விராட் கப்பற்படைக் கப்பலை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தன் சொந்த டாக்ஸியாக துஷ்பிரயோகம் செய்யவில்லையா என்று பிரதமர் மோடி இன்று புதுடெல்லி ராம்லீலா மைதானப் பிரச்சாரத்தின் போது தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே ராஜீவ் காந்தியை தூய்மையானவராக காங்கிரஸ் காட்டியது, ஆனால் அவர் ஊழல்வாதியாக மறைந்தார் என்று பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் இன்று ராம் லீலா மைதானத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நான் டெல்லி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், அதே வேளையில் நான் சில விஷயங்களுக்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். நான் பயணிக்கும் போது எனக்காக சாலையில் தடுப்புகளும் இடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. தவுலா கானை நான் கடக்கும் போது வேதனையடைந்தேன் இன்று பணிக்குச் சென்று திரும்புபவர்கள் என்னை முன்னிட்டு வீட்டுக்குத் தாமதமாகச் செல்வதை நினைத்து வருத்தமுற்றேன்.
மாநிலங்கள் முழுதும் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் குடும்பத்தின் அல்லது பிற குடும்பத்தின் அரசியல் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதாகவே வேலை செய்கின்றனர். இதேதான் பிஹார், மகாராஷ்டிரா, உ.பி., கர்நாடகாவிலும் தொடர்கிறது. இவர்கள் தங்கள் மூதாதையர்களின் பெயரைக்கூறி வாக்கு கேட்கிறார்கள். ஆனால் இவர்களின் மூதாதையர்களின் சிலபல செயல்களை நாம் எடுத்து விட்டால் அதிர்ந்து நிலைகுலைந்து போகின்றனர்.
1984 சீக்கியர்கள் கலவரம் பற்றி காங்கிரஸ் என்ன கூறுகிறது? காங்கிரஸ் ஆட்சியின் அத்தனைத் தவறுகளையும் நாங்கள் சரி செய்து வருகிறோம். முதல் முறையாக சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்குக் காரணமானவர்கள் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். காங்கிரஸ் பல குற்றவாளிகளை சுதந்திரமாக வெளியில் விட்டது.
அவர்கள் கூறுகிறார்கள் ஆயுதப்படையினர், ராணுவம் என்னுடையது அல்ல என்று கூறுகிறார்கள். ஆனால் இன்று இந்த டெல்லியில் இருந்து கொண்டு நான் அவர்களைப் பற்றி ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். கண்ணுக்கு நேராகக் கூறுகிறேன். யாராவது கப்பற்படைக்குரிய கப்பலை விடுமுறைக்காகப் பயன்படுத்தியதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஐஎன்எஸ் விராட் என்ற கப்பலை தன் சொந்த டாக்ஸி போல் பயன்படுத்தியவரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவர் நம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திதான். அவர் பிரதமராக இருந்த போது 10 நாட்கள் விடுப்பில் சென்றார். ராஜீவ் காந்தியும் அவரது நெருங்கிய உறவினர்களும் ஐஎன்எஸ். விராட்டை பயன்படுத்தினார்கள். ரோந்துப் பணியிலிருந்த ஐ.என்.எஸ் விராட்டை அங்கிருந்து அழைத்து தன் சொந்த டாக்ஸியாக்கிக் கொண்டனர்.
கப்பற்படை அதிகாரிகள் அவர்களின் சேவகர்களாக பணியாற்றியே ஆக வேண்டும். இது ஆயுதப்படையினை துஷ்பிரயோகம் செய்வதாகாதா?
இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.