Published : 29 May 2019 12:12 PM
Last Updated : 29 May 2019 12:12 PM

ராமரின் முடிசூட்டு விழாவும் வியாழன் அன்றுதான் நடந்தது; விரைவில் ராமர் கோயில்: சிவசேனா உற்சாகம்

ராமரின் முடிசூட்டு விழாவும் வியாழக்கிழமை அன்றுதான் நடந்தது என்றும் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும் என்றும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா உற்சாகமாகத் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமராகி உள்ள மோடியால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் லட்சியம் நிறைவேற உள்ளதாகவும் சிவசேனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழாகன் சாம்னாவில் கூறியிருப்பதாவது:

''கடவுள் ராமரின் சிந்தனைகளைக் கொண்ட கட்சி, மத்தியில் அதிகாரத்துக்கு வந்துவிட்டது. ராமரின் ஆசியோடு தேசத்தில் ராம ராஜ்ஜியம் உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையில் கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்துள்ளனர்.

ராமர் தேசத்தின் அடையாளம், நமது பெருமை. ராமர் கோயில் கட்டுவதற்காக நூற்றுக்கணக்கான கரசேவகர்கள் தங்களின் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் ஒரு சொட்டு ரத்தம் கூட வீணாகாது. அத்தகைய எண்ண ஓட்டத்தைக் கொண்ட அரசைத்தான் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ராமர் கோயில் நிச்சயம் எழுப்பப்படும்.

ராமரின் முடிசூட்டு விழா கூட ஒரு வியாழக்கிழமையில்தான் நடந்தது. இதை மோடியின் பதவியேற்பு விழாவுடன் ஒப்பிட்டு தேசமே மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைகிறது. ராமர் கோயிலைக் கட்டி எழுப்புவது என்பது சிறந்த தேசத்தையே உருவாக்குவது போன்றது. ராமரின் வெற்றி ஊர்வலத்தை யாராலும் தடுக்க முடியாது.

அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவது என்பது சிவசேனா, பாஜக மற்றும் கோடிக்கணக்கான இந்து சகோதரர்களின் சபதமாகும். உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலோடுதான் ராமர் கோயில் எழுப்பப்படும் என்னும் பிரதமர் மோடியின் கூற்றை நாங்கள் ஏற்கிறோம். நீதிமன்றமும் மக்களின் எண்ணத்தைக் கருத்தில் கொண்டு விரைந்து முடிவெடுக்க வேண்டும்''.

இவ்வாறு சாம்னா தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x