Published : 08 Sep 2014 06:44 PM
Last Updated : 08 Sep 2014 06:44 PM

திறன் மேம்பாடு, நதிநீர் தூய்மைத் திட்டங்களில் இந்தியா - ஜெர்மனி ஒத்துழைக்க முடிவு

திறன் மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை, நதிநீர்த் தூய்மைத் திட்டங்களில் இந்தியா - ஜெர்மனி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மெர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "ஜெர்மனி நாட்டுடன் இந்தியா பல ஆண்டு காலமாக கொண்டுள்ள வர்த்தக ரீதியிலான உறவு மகிழ்ச்சியளிக்கிறது. இவை அடுத்த தலைமுறையிலும் தொடர வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

இதனை மேலும் தொடரும் வகையில் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் வளர்ச்சிக்கு ஏற்றவாறு திட்டங்களை வகுப்பது இரு நாட்டு வளர்ச்சிக்கு உதவியாக அமையும். திறன் மேம்பாட்டில் ஜெர்மனி பலமும் அனுபவமும் பெற்றுள்ளது. இதனை இந்திய இளைஞர்களும் பெறும் வகையில் எங்களது மனித வளத்தை மேம்படுத்த பயிற்சி அளித்து ஊக்குவிக்க வேண்டும்.

அதேபோல, திடக்கழிவு மேலாண்மை மற்றும் நதிகளை சுத்திகரிப்பு வழிமுறைகளை பின்பற்றி தூய்மையான சமூகத்தை உருவாக்க எங்களது அரசு ஆயத்தமாக உள்ளது. இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளிலும் எங்களது நாடு ஜெர்மனியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வத்துடன் உள்ளது" என்று பிரதமர் மோடி தெரிவித்தாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, நகர்ப்புற வளர்ச்சித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, வர்த்தக- தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை ஜேர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மெர் சந்தித்து பேசினார்.

இந்திய வர்த்தகக் குழுவுடன் இருநாடுகளிடையேயான வர்த்தகத்தை அதிகரிக்கச் செய்வது குறித்தும், இந்தியாவில் ஜெர்மனியின் முதலீட்டை எளிமையாக்குவது குறித்து கடந்த ஜூலை 17- ஆம் தேதி இந்தியா வந்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்ஜலா மெர்கெல் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்த இரு நாட்டு ஒப்பந்தம் 2015- ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x