Published : 23 Sep 2014 10:19 AM
Last Updated : 23 Sep 2014 10:19 AM

69 சதவீத இட ஒதுக்கீடு: தமிழக அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநிலங்களில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஒய்.இக்பால், பினாகி சந்திர கோஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் விஜயன், சிவபாலமுருகன் ஆகியோர், “உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி, தமிழகத்தில் இட ஒதுக்கீடு கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வழக்கு தொடர்ந்து அவர்களுக்கு நிவாரணம் பெற வேண்டிய நிலை உள்ளது. தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடுக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தால் இப்பிரச்சினை முடிவுக்கு வரும்” என்று வாதிட்டனர்.

அப்போது நீதிபதிகள், “நாடு முழுவதும் 50 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்போது, தமிழகத்தில் மட்டும் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர். தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, “இம்மனு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு மேலும் இரண்டு வாரம் அவகாசம் அளிக்க வேண்டும்” என்று கோரினார். இதையடுத்து இரண்டு வாரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விஷம் குடித்த பெண் வழக்கறிஞர்

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நேற்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை உறவினர்கள் சிலர் கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கு விசாரணையின்றி நிலுவையில் இருப்பதால் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இவ்வழக்கு தலைமை நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x