மோடியின் தொலைபேசி அழைப்பை ஏற்காதது குறித்து மம்தா விளக்கம்

மோடியின் தொலைபேசி அழைப்பை ஏற்காதது குறித்து மம்தா விளக்கம்
Updated on
1 min read

ஃபானி புயல் குறித்து ஆலோசனை நடத்த முயன்ற மோடியின் தொலைபேசி அழைப்பை ஏற்காதது குறித்து மம்தா விளக்கம் அளித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) மேற்கு வங்கத்தின் தம்லுக் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, ''மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மம்தா தீதியுடன் பேச முயற்சி செய்தேன். ஆனால் அவர், அகங்காரத்தால் என்னுடன் பேச மறுத்துவிட்டார். வேகத்தடையாக இருக்கும் அவர், ஃபானி புயலில் கூட அரசியல் செய்ய முயற்சிக்கிறார். 

மீண்டும் ஒருமுறைகூட பேச முயற்சித்தேன். ஆனால் மம்தா என்னைத் தொடர்புகொள்ளவில்லை.  இவரின் கர்வத்தால், மேற்கு வங்கத்தின் வளர்ச்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளன. ஃபானி புயல் குறித்து விவாதிக்க ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டவும் விரும்பினோம். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை'' என்று தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலடி தரும் விதமாகப் பேசியுள்ளார் மம்தா பானர்ஜி. விஷ்ணுபூரில் நடந்த பேரணியில் கலந்துகொண்ட அவர், ''பிரதமர் தொலைபேசியில் அழைத்தபோது நான் கொல்கத்தா அருகில் உள்ள காரக்பூரில் கள நிலவரத்தை ஆய்வு செய்துகொண்டிருந்தேன். அப்போது பிரதமர் பிரச்சாரத்தில் இருந்தார்.

அதே நேரத்தில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் காலாவதியான பிரதமருடன் நான் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை'' என்று தெரிவித்தார்.

'காலாவதி பிரதமர்' என்பது மோடியின் பிரதமர் அதிகாரம் முடிந்துவிட்டது. அவர் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார் என்ற தொனியில் கூறப்பட்டதாகும்.

புயல் வருவதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, ஆளுநர் கேசரி நாத் திரிபாதியிடம் கேட்டறிந்ததால் மம்தா பானர்ஜி அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in