Published : 07 May 2019 11:42 AM
Last Updated : 07 May 2019 11:42 AM

ஜெய் ஸ்ரீராம் சொல்லும் நீங்கள், ஒரு ராமர் கோயிலையாவது கட்டினீர்களா?- மோடிக்கு மம்தா கேள்வி

ஜெய் ஸ்ரீராம் சொல்வதாய்க் கூறும் மோடி, என்றேனும் ஒரு ராமர் கோயிலையாவது கட்டினாரா என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா கேள்வி எழுப்பி உள்ளார்.

 

மக்களவைத் தேர்தலை ஒட்டி மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட மோடி,  ''இப்போதெல்லாம் தீதி மிகுந்த விரக்தியில் இருக்கிறார். அவருக்கு கடவுளைப் பற்றிப் பேசப் பிடிப்பதில்லை. கேட்கக் கூட விரும்புவதில்லை. 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிட்டவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார் மம்தா. 'நானும் ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிடுகிறேன். இதனால் என்னையும் அவர் சிறையில் தள்ளட்டும்'' என்று கூறினார்.

 

இதற்குப் பதிலடி தரும் விதமாகப் பேசியுள்ளார் மம்தா பானர்ஜி. விஷ்ணுபூரில் நடந்த பேரணியில் நேற்று கலந்துகொண்ட அவர், ''பாஜக பாபுவே (சகோதரர்) நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்கிறீர்கள், இதுவரை ஒரு ராமர் கோயிலையாவது எழுப்பி உள்ளீர்களா? தேர்தல்களின் போது மட்டுமே ராமர் உங்களின் முகவர் ஆகிவிடுகிறார்.

 

அப்போது 'ஜெய் ஸ்ரீராம்' என்பீர்கள்; அடுத்தவர்களையும் கூறவேண்டும் என்று கட்டாயப்படுத்துவீர்கள். மக்களுக்கு நீங்கள் கொடுக்க விரும்பும் ஸ்லோகங்களைக் கோஷமிடுமாறு அவர்களை நீங்கள் வலியுறுத்த முடியாது.

 

நாங்கள் கடவுள் ராமரை மதிக்கிறோம். அவருக்கு முறையாக எப்படி மரியாதை கொடுக்கவேண்டும் என்றும் தெரியும். நான் 'ஜெய் ஹிந்த்' சொல்வேன். 'வந்தே மாதரம்', 'மா- மாதி- மனுஷ்-எர் ஜெய்' கூறுவேன். ஆனால் பாஜக என்ன சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பதைக் கூற மாட்டேன்'' என்றார் மம்தா.

 

முன்னதாக, மம்தா பானர்ஜி வாகனம் சென்றபோது, 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிட்ட மூவர் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வைரலானது. இதைத் தொடர்ந்து மோடி பேசியதற்கு மம்தா பதில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x