Last Updated : 24 May, 2019 10:36 AM

 

Published : 24 May 2019 10:36 AM
Last Updated : 24 May 2019 10:36 AM

உ.பி.யில் 15 இடங்களில் மட்டுமே வென்ற மெகாகூட்டணி:சந்தேகத்தை கிளப்பும் மாயாவதி

உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் மெகா கூட்டணி(மகாகட்பந்தன்) 15 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது.

எப்போதும் இல்லாத இந்த தோல்விக்கு வாக்கு எந்திரத்தில் செய்த தில்லுமுல்லு காரணம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சந்தேகம் எழுப்பியுள்ளார்.

452 மக்களவைத் தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது இதில் பாஜக மட்டும் 292 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் கடந்த 2014-ம் ஆண்டில் பாஜக மட்டும் 71 இடங்களில் வென்றிருந்தது.

இதனால், இந்த முறை அந்த கட்சியின் வெற்றியைத் தடுக்கும் வகையில் எதிர்துருவங்களாக மாநிலத்தில் வலம் வந்த பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி ஆகிய இரு கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி(மகாகட்பந்தன்) அமைத்தன.

மாநிலத்தில் அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளை மட்டும் விடுத்து 78 தொகுதிகளில் போட்டியிட்டனர். காங்கிரஸ் தனியாகவும், பாஜக தனியாகவும் போட்டியிட்டன. இதனால், இரு பெரிய கட்சிகள் இணைந்திருப்பதால், இந்த முறை அதிகமான இடங்களை கைப்பற்றும், பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்படும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன.

ஆனால், தேர்தல் முடிவுகள் அனைத்தும் தலைகீழாக மாறியது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக 63 இடங்களில் வென்றது, பகுஜன் சமாஜ் கட்சி 9 இடங்களையும், சமாஜ்வாதிக் கட்சி 5 இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், அப்னா தளம் ஒரு இடத்திலும் வென்றது.

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரேபரேலியில் சோனியா காந்தி மட்டுமே வென்றுள்ளார்.

இந்த தோல்வி குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த தோல்வி முன்எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமானதாக கருதுகிறேன். நாங்கள் அமைத்த இந்த கூட்டணியால்தான் தோல்வி ஏற்பட்டது என்ற வாதத்தை ஏற்கவில்லை. மக்கள் இந்த தோல்வியை ஏற்கவும் தயாராக இல்லை. இது மக்களின் உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் எதிரான வெற்றியாகவே பார்க்கிறேன்.

இந்த தேர்தலில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக நான் பார்க்கிறேன். குறிப்பாக மின்னனு வாக்கு எந்திரங்களில் ஏராளமான தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாக என்னுடைய பார்வைக்கு வந்தது. நாடுமுழுவதும் இதேபோலத்தான் நடந்துமக்களின் நம்பிக்கையை இவிஎம் எந்திரம் மாயமாக்கியுள்ளது.

அனைத்துகட்சிகளும் வாக்குச்சீட்டு முறையில்தான் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோது, பாஜகவும், தேர்தல் ஆணையமும் அதற்கு சம்மதிக்காதது ஏன். இதன் மூலம் எங்கோ சில தவறுகள் நடந்திருக்கிறது.

பலஇடங்களில் எதிர்க்கட்சிகள் வென்றிருக்கின்றன, அப்போதெல்லாம் மின்னனு வாக்குஎந்திரத்தில் எந்தவிதமான தவறுகளும் நடக்கவில்லை. ஆனால், பெரும்பாலான இடங்களில், வாக்கு எந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது. தலித்துகள், சமூகத்தில் விளிம்புநிலையில் இருப்போருக்கான பிரதிநிதித்துவம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆனால், ஆளும் பாஜக இந்த பிரதிநிதித்துவத்தை வாக்கு எந்திரங்கள் மூலம் கபளீகரம் செய்துவிட்டது.

மின்னணு வாக்குஎந்திரத்தில் தொடர்ந்து குளறுபடிகள் நடப்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். இதை உச்ச நீதிமன்றமும் கருத்தில் எடுத்து வாக்கு சீட்டு முறைக்கு பரிசீலிக்க வேண்டும்.மின்னணு வாக்கு எந்திர முறையில் தேர்தல் நடத்துவதில் மக்களுக்கும் மனநிறைவு இல்லை.

இவ்வாறு மாயாவதி தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x