Published : 03 May 2019 07:48 AM
Last Updated : 03 May 2019 07:48 AM

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்கள் விருப்பங்களை நிறைவேற்றுவோம்- காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் விருப்பங்களையும் அவர்கள் சொல்வதையும் நிறைவேற்றுவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் சிம்டேகா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் சமூகத்தின் எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் தவறான கொள்கைகளால் ஏழைகளும், நடுத்தர மக்களும் துயரம் அடைந்துள்ளனர்.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. வறுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். விவசாயிகளின் நிலைமை மேசமாக இருந்தும் அவர்களது கடன்களை பிரதமர் மோடி தள்ளுபடி செய்யவில்லை. அவர் தனக்கு நெருக்கமான 15 முதல் 20 தொழிலதிபர்களுக்காக மட்டுமே பணியாற்றி வருகிறார். பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவற்றால் சாதாரண மக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனது மனதின் குரலைப் பேச நான் இங்கு வரவில்லை. மக்களின் மனதின் குரலை கேட்க வந்துள்ளேன். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் விருப்பங்களையும் அவர்கள் சொல்வதையும் நிறைவேற்றுவோம். ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். பிரதமர் நரேந்திர மோடியோ அல்லது வேறு எந்தக் கட்சியின் தலைவர்களோ உங்களின் எஜமானர்கள் அல்ல.

மக்கள் குரல்

என்ன செய்ய வேண்டும் என்று மக்களாகிய நீங்கள் சொல்ல வேண்டும். அதன்படி நாங்கள் செய்வோம். மக்களின் குரலாக காங்கிரஸ் செயல்படும். நியாய் திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை திட்டம் அறிமுகம் செய்யப்படும். ஜிஎஸ்டி வரி விதிப்பு எளிமையாக்கப்படும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x