Last Updated : 05 May, 2019 03:18 PM

 

Published : 05 May 2019 03:18 PM
Last Updated : 05 May 2019 03:18 PM

தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார்; நீதிபதி பாப்டேவை  நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் சந்திக்கவில்லை: உச்ச நீதிமன்றம் மறுப்பு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி பாப்டேவை நீதிபதிகள் ஃபாலி நாரிமன், சந்திரசூட் ஆகியோர் சென்று சந்தித்தாக வந்த செய்தி தவறானது. அவ்வாறு அவர்கள் சந்திக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் , நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பாலியல் அத்துமீறல் புகார்களைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் உள்ள  22 நீதிபதிகளுக்கும் பிரமாணப் பத்திரமாக அனுப்பினார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பரிந்துரையின் அடிப்படையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மிக மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது. அந்த அமர்வில் பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி, இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இடம் பெற்றனர்.

புகார் அளித்த முன்னாள் பெண் ஊழியர், நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் விசாரணைக் குழு முன் நேரில் ஆஜராகினார். ஆனால், அவருடன் வழக்கறிஞரை அழைத்து வர நீதிபதிகள் அனுமதி மறுத்ததால், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த விசாரணையில் இருந்து திடீரென அந்தப் பெண் விலகினார். மீண்டும் எப்போது விசாரணை குழு முன் ஆஜராவார் எனத் தெரியவில்லை.

இதற்கிடையே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், கடந்த சில நாட்களுக்கு முன் நீதிபதி பாப்டே குழு முன் ஆஜராகி தேவையான தகவல்களை அளித்தார்.

இந்த சூழலில் இன்று முன்னணி ஆங்கில நாளேடு ஒன்றில், தலைமை நீதிபதி மீதான புகார் குறித்து விசாரித்து வரும் நீதிபதி பாப்டேவை, நீதிபதிகள் ஃபாலி நாரிமன், சந்திரசூட் ஆகியோர் தனிப்பட்ட முறையில் சந்தித்தாக செய்தி வெளியிட்டது.

இந்தச் சந்திப்பின்போது நீதிபதிகள் சந்திரசூட்டும், ஃபாலி நாரிமனும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தி, 3 பேர் கொண்ட விசாரணைக் குழு வழக்கை ஒருதரப்புக்குச் சாதகமாக ஏதும் விசாரிக்கக்கூடாது என்று தெரிவித்ததாக அந்தச் செய்தியில் இடம் பெற்றிருந்தது.

புகார் அளித்த நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியரும் பல்வேறு கோரிக்கைகளை நீதிபதிகள் குழு முன் வைத்துள்ளார். குறிப்பாக வழக்கறிஞர் ஒருவரை விசாரணையின் போது அழைத்து வருவேன் என்ற கோரிக்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அந்தப் பெண் விசாரணைக்கு வராமல் சென்றுவிட்டார்.  

மேலும் இந்தக் குழுவின் விசாரணைக் காலத்தை உறுதியாகக் கூறமுடியாது, குறிப்பிட்ட காலத்துக்குள்  விசாரணையை முடிக்க வேண்டும் என்ற காலக்கெடு இல்லை, விசாரணை விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று ஏற்கெனவே நீதிபதி பாப்டே தெரிவித்தார்.  இதனால், புகார் தெரிவித்த பெண் ஊழியர் அதிருப்தியோடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் நீதிபதிகள் சந்திரசூட், ஃபாலி நாரிமன் ஆகியோர் நீதிபதி பாப்டே சந்தித்து பல்வேறு ஆலோசனைகள் கூறியதாக நாளேடு செய்தி வெளியிட்டது. அதில் நீதிபதிகள் குழுவுக்கு உதவ மூத்த வழக்கறிஞர் ஒருவரை ஆலோசகராக நியமிக்கலாம் என்று நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீதிபதி பாப்டேவை, நீதிபதிகள் சந்திரசூட், ஃபாலி நாரிமன் ஆகியோர் சந்தித்த செய்தி தவறானது, அவ்வாறு எந்தச் சந்திப்பும் நடக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு முன்னணி நாளேடு, நீதிபதி பாப்டேவை நீதிபதிகள் ஃபாலி நாரிமன், டி.ஒய் சந்திரசூட் ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலைசந்தித்ததாக செய்தி வெளியிட்டது துரதிர்ஷ்டமானது. அது முழுமையாக தவறான செய்தி. நீதிபதி பாப்டே தலைமையிலான குழு எந்த நீதிபதிகள் குழுவிடம் இருந்தும் எந்தவிதமான தகவல்களையும் பெறாமல் விசாரணை நடத்தி வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x