தமிழகத்துக்கு எப்போது காவிரி நீர்? - காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம் கூடியது

தமிழகத்துக்கு எப்போது காவிரி நீர்? - காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம் கூடியது
Updated on
1 min read

காவிரியில் தமிழகத்துக்கு கர்நாடகா எப்போது தண்ணீர் திறந்து விடும் என்ற பரபரப்பான கேள்வி எழுந்துள்ள சூழலில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3-வது கூட்டம் டெல்லியில்  கூடியது.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை பங்கீடு செய்வதற்காக புதிய வரைவு செயல் திட்டம் உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு சட்டம் 6(ஏ) 1956-ன்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அதற்கான புதிய வரைவு திட்டத்தை யும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த வரைவு திட்டத்தை தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டன. அதன் அடிப்படையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அலுவலகம் டெல்லியிலும், காவிரி ஒழுங்காற்று ஆணைய அலுவலகம் பெங்களூருவிலும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக, மத்திய நீர்வள ஆணையத் தலைவர் மசூத் உசேன் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த சூழலில், கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மத்திய நீர்வள ஆணையமும் மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு  தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3-வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் 4 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்வதை தடுக்க வேண்டும், தமிழகத்துக்கு திறந்துவிடப்பட வேண்டிய 9.19 டி.எம்.சி. தண்ணீரை ஜூன் 1-ந் தேதி முதல் திறந்து விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழகம் வலியுறுத்தும் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in