Published : 30 May 2019 01:01 PM
Last Updated : 30 May 2019 01:01 PM

ஆந்திராவின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு; ஸ்டாலின், சந்திரசேகர ராவ், தெலுங்குத் திரையுலகினர் பங்கேற்பு

கட்சி ஆரம்பித்து 9 ஆண்டுகளில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர முதல்வராக இன்று பதவியேற்றார்.

விஜயவாடாவின் இந்திரா காந்தி திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் நரசிம்மன் ஜெகன் மோகன் ரெட்டிக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். திறந்த ஜீப்பில் கூப்பிய கைகளோடு வந்த ஜெகன், அங்கிருந்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

விழாவில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஆந்திர தலைமைச் செயலர் எல்.வி.சுப்ரமணியம், தெலங்கானா அமைச்சர் ஸ்ரீனிவாஸ் யாதவ், பாஜக எம் எல் சிக்கள் சோமு வீர்ராஜு, பி.வி.என்.மாதவ்  மற்றும் உயர் அதிகாரிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான தெலுங்கு தேசத்தின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்த போதிலும், விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை. அவருக்குப் தெலுங்கு தேசம் சார்பில் மூத்த எம்எல்ஏக்கள் இருவர் கலந்துகொண்டனர்.

தெலுங்குத் திரையுலகத்தினருக்கும் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மோகன் பாபு, பாலகிருஷ்ணா, அக்கினேனி நாகார்ஜூனா உள்ளிட்ட பலர் விழாவைச் சிறப்பித்தனர்.

திருப்பதியில் வழிபாடு

முன்னதாக நேற்று திருப்பதி சென்ற ஜெகன் மோகன் ரெட்டி, பெருமாளை வழிபட்டார். விஜயவாடாவில் நேற்று பெய்த மழையால், பதவியேற்பு நடைபெற இருந்த மைதானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எனினும் அப்பகுதிகள் விரைவில் சரிசெய்யப்பட்டன.

46 வயதான ஜெகன் மோகன் ரெட்டி, முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனாவார். கடப்பா தொகுதியின் எம்.பி.யாகப் பதவி வகித்த ரெட்டி, தந்தை இறந்த பிறகு  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்தார்.

மக்களவைத் தேர்தலோடு நடைபெற்ற ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் 175 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 151 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x