

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து அம்மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய அமைச்சரவை இன்று பதவியேற்கும் நிலையில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த இரண்டு எம்.பி.க்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குவங்கத்தில் மக்களவைத் தேர்தலில் 22 தொகுதிகளில் 18 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. அதன் நீட்சியாக திரிணமூல் எம்.பி.க்களில் இருவரும், கவுன்சிலர்களில் 60 பேரும் பாஜகவில் இணைந்தனர். மேற்குவங்க பாஜக தலைவர் முன்னிலையில் அவர்கள் பாஜகவில் இணைந்தனர். இது மம்தாவுக்கு பேரதிர்ச்சியாகவும் அவமானமாகவும் அமைந்தது.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் முடிவை அவர் மாற்றியமைத்தார். தேர்தல் கலவரத்தில் கொல்லப்பட்ட பாஜக தொண்டர்களின் உறவுகளை பதவியேற்பு விழாவுக்கு அழைத்து அரசியல் செய்வதாகக் கோரி அவர் விழாவில் பங்கேற்பதை புறக்கணித்தார்.
இந்நிலையில், அடுத்ததாக அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்திருக்கிறது பாஜக. அதன் நிமித்தமாக வியூகம் வகுக்கும் பாஜக, மேற்குவங்கத்தைச் சேர்ந்த 2 எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க முடிவு செய்துள்ளது.
ராய்கஞ்ச் தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற தேபஸ்ரீ சவுத்ரி, பாபுல் சுப்ரியோ ஆகியோர் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது.
இது தொடர்பாக தேபஸ்ரீ சவுத்ரி தன்னை மத்திய அமைச்சரவையில் இணைப்பதாக தகவல் வந்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக ஆட்சி அமைக்கும் என்றார்.
அவர் மேலும் பேசும்போது, "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்திருந்தேன். வரவிருக்கும் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் கட்சி எங்களுக்கு போட்டியாகவே இருக்காது. அவர்களின் எம்.எல்.ஏ.க்களும், கவுன்சிலர்களும் எங்களுடன் இப்போதே சேர ஆரம்பித்துவிட்டனர். திரிணமூல் கட்சிஅயை 5,6 மாதங்களில் முடித்துக் காட்டுவோம்" என்றார்.