விவாகரத்தாகி பிரிந்த தம்பதிகளை மீண்டும் ஒன்றுசேர்த்த தேர்தல்: தெலங்கானாவில் ருசிகரம்

விவாகரத்தாகி பிரிந்த தம்பதிகளை மீண்டும் ஒன்றுசேர்த்த தேர்தல்: தெலங்கானாவில் ருசிகரம்
Updated on
1 min read

கருத்துவேறுபாட்டால் பிரிந்து விவாகரத்து பெற்ற தம்பதிகள், தேர்தலை முன்னிட்டு மீண்டும் இணைந்து வாழ ஆரம்பித்துள்ளனர். இந்த ருசிகர சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.

ராமடுகு மண்டல், கொரட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கரேகிட்டி லட்சுமண். உள்ளூர் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) தலைவரான இவர் 11 ஆண்டுகளுக்கு முன்பு கவிதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்தார்.

5 ஆண்டுகளுக்கு முன்னால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பெரியவர்கள் தலையிட்டு சமாதானப்படுத்த முயன்றனர். முடியவில்லை. விவாகரத்தே தீர்வு என்று கருதியவர்கள் நீதிமன்றத்தை அணுகி, டைவர்ஸ் பெற்றனர், தனித்தனியாக வாழ ஆரம்பித்தனர்.

இந்நிலையில் அண்மையில், உள்ளூர் தேர்தல் அறிவிப்பு வெளியானது. லட்சுமணனின் தொகுதியில் தாழ்த்தப்பட்டப் பிரிவைச் சேர்ந்த பெண்ணுக்கு சீட் ஒதுக்கப்பட்டது. இதை அறிந்த லட்சுமணன், தனது தாய்க்கு சீட் வழங்கப்பட வேண்டும் என்று அப்பகுதி டிஆர்எஸ் எம்எல்ஏ ரவிஷங்கரிடம் கோரிக்கை விடுத்தார்.

லட்சுமணனின் திருமண வாழ்வு குறித்து அறிந்திருந்த ரவிஷங்கர், அவரின் மனைவி வந்தால் மட்டுமே சீட் ஒதுக்கமுடியும் என்று கறாராகக் கூறிவிட்டார். பெரியவர்களின் உதவியோடு மனைவியைச் சமாதானப்படுத்தி அழைத்து வந்து, தேர்தலில் பணியாற்றும்படியும் உத்தரவிட்டார்.

கொத்தபள்ளியில் உள்ள மனைவி கவிதாவின் பெற்றோர் வீட்டுக்குச் சென்றார் லட்சுமணன். சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்த அவர், தேர்தலில் சீட் கிடைக்க விதிக்கப்பட்ட விதிமுறை குறித்தும் விளக்கினார். கணவனின் கோரிக்கையை ஏற்ற கவிதா, கொரட்டப்பள்ளி திரும்பினார். கணவன், மனைவியாக சேர்ந்து சென்று மனுத்தாக்கல் செய்த இருவரும் தற்போது ஒன்றாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய டிஆர்எஸ் எம்எல்ஏ ரவிஷங்கர், ''தேர்தலை முன்னிட்டு தம்பதிகள் இருவரும் ஒன்றுசேர்ந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. சேர்ந்து வாழ்வதே உண்மையான மகிழ்ச்சி. இதற்கு தெலங்கான ராஷ்ட்ரிய சமிதி உதவியுள்ளது'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in