Published : 02 May 2019 06:54 PM
Last Updated : 02 May 2019 06:54 PM

‘அபாயகரமான வீடியோ’ : ட்விட்டரில் பகிர்ந்த மும்பை போலீஸ்-  நெட்டிசன்கள் கடும் சாடல்

செல்ஃபி எடுப்பதன் அபாயகரம், உயிர்நாசம் ஆகியவை பல்வேறு ஊடகங்களில் செய்தியாக வெளி வந்த நிலையிலும் அபாயகரமான செல்ஃபிக்கள் எடுப்பது இன்னமும் குறைந்தபாடில்லை.

செல்ஃபி மோகம் என்பது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் டெல்லியில் பூங்கா ஒன்றில் 4 நண்பர்கள் செல்ஃபி எடுத்தனர், பிறகு அருகிலிருந்த ரயில்வே பாதையிலும் சென்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர் அப்போது ரயில் வந்து இவர்கள் மீது மோதியதில் ஒருவர் தப்பிக்க மற்ற 3 பேர் உடல் சிதறி பலியானார்கள்.

செல்ஃபி மோகம் என்பது ஒரு நார்சிச  (சுயமோகம், தற்காதல் எனும் நோய்) மனோவியாதி மண்டலம் என்று இன்றைய இளைஞர்களுக்கு யாரும் அறிவுறுத்துவதில்லை. அதனால் அதன் அபாயகர வழிகள் தொடர்கின்றன. செல்ஃபி எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்வது அதற்கு எவ்வளவு லைக்குகள் என்று பார்த்து ஆனந்தம் அடைவது என்பது ஒரு தனிமனித வக்ர மனநோய் என்பதிலிருந்து சமூக நோயாக தற்போது மாறி வருகிறது.

இந்நிலையில் மும்பை போலீஸார் நல்லெண்ணத்துடன் தங்கள் வலைப்பக்கத்தில் செல்ஃபி மோகம் வேண்டாம் என்பதை அறிவுறுத்த  அயல்நாட்டில் பெரிய கட்டித்தின் அதிமேல் உச்சியில் முனையில் நின்று கொண்டு செல்ஃபி எடுக்கும் ஒரு நபர் அதலபாதாளத்தில் விழுந்து உடல் சிதறி பலியான காட்சியை பகிர்ந்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருக்கும் வாசகத்தில், “மிகவும் பயங்கரமான செல்பியை முயற்சிக்கிறீர்களா? அல்லது இன்னொரு பொறுப்பற்ற சாகச முயற்சியா? எதற்காக இருந்தாலும் இது போன்ற ரிஸ்க்கிற்கு அது மதிப்புடையது அல்ல” என்று எச்சரித்து உயரமான கட்டிடத்திலிருந்து செல்ஃபி எடுக்கும் நபர் பலமாடி உயரத்திலிருந்து கீழே விழும் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.

மும்பை போலீஸார் இதனை நல்ல நோக்கத்துடன் பகிர்ந்தாலும் நெட்டிசன்கள் பலர் ‘எச்சரிக்கை இது ஒரு தொந்தரவு உண்டாக்கும் வீடியோ’ என்றும் மும்பை போலீஸ் இது குறித்து பொறுப்புத் தவிர்ப்பு வாசகங்களுடன் வெளியிட்டிருக்க வேண்டும் என்றும் பல நெட்டிசன்கள் மும்பை போலீஸை சாடியுள்ளனர்.

இவ்வளவு கோரமான ஒரு பலியை ட்விட்டர் தளத்தில் பகிர்வதன் மூலம் ஏற்கெனவே பித்துப் பிடித்து அலையும் டிவிட்டர்வாசிகளுக்கு இது இன்னொரு தூண்டுதலாகக் கூட அமையும் என்றும் சிலர் பொறுப்புடன் கூறியுள்ளனர்.

ஆனால் ஒருசிலர் மும்பை போலீஸ் பொறுப்புடன் செயல்பட்டுள்ளதாகப் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில் எதற்கெடுத்தாலும் ட்விட்டரில் கருத்துகளைப் போட்டுக்கொண்டிருக்கும் நடிகர் சித்தார்த் கண்ணிலும் இந்த மும்பை போலீஸ் ட்வீட் கண்ணில்பட்டு விட்டது.

அவரும் பொறுப்புடன் ஒரு ட்வீட் செய்துள்ளார்: ஒரு மனிதர் பலியாகும் வீடியோவைப் பகிரும் முன்பாக ஒரு எச்சரிக்கை செய்யுங்கள். உங்கள் நோக்கம் நல்லதுக்குத்தான். பொறுப்பற்ற செயல்கள் என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x