

1984-ல் சீக்கியர்களைக் கொல்லச்சொல்லி பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பாஜக பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், ''1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்கள் குறித்து விசாரித்த நானாவதி கமிஷனில் சில தகவல்கள் கூறப்பட்டுள்ளன. அரசே தனது சொந்த மக்களைக் கொன்று குவித்த மிகப்பெரிய இனப் படுகொலையில், பிரதமர் ராஜீவ் காந்தியின் அலுவலகத்தில் இருந்து உத்தரவுகள் நேரடியாகப் பிறப்பிக்கப்பட்டன.
இதற்கான வினைப்பயனைத் தீர்க்கவும் நீதி கிடைக்கவும் தேசமே காத்திருக்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அமேதியில் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, ''போபர்ஸ் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஊழல்வாதி நம்பர் ஒன்'' என்று பேசியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ராஜீவ் மகனும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில்,"மோடி ஜி, போர் முடிந்துவிட்டது. உங்களின் வினைப்பயன் உங்களுக்காகக் காத்திருக்கிறது. உங்களுடைய உள்ளார்ந்த நம்பிக்கைகள்தான் உங்களை வெளிப்படுத்தும். என்னுடைய தந்தை உங்களைப் பாதுகாக்கமாட்டார். என்னுடைய ஆழ்ந்த அன்பு உங்களிடம் இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராகுலுக்கு பதிலடியாக, 1984-ல் சீக்கியர்களைக் கொல்லச்சொல்லி பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பாஜக தெரிவித்துள்ளது.