

மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி நகரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக மூன்று இளைஞர்களை கும்பல் ஒன்று தாக்கியுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில், "மத்தியப் பிரதேசத்தின் சியோனி நகரில் ஓர் ஆட்டோவில் மாட்டிறைச்சியை சிலர் கொண்டு செல்வதாக தகவல் பரவியுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பசு பாதுகாவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவ்வழியாக ஒரு பெண்ணும் இரண்டு இளைஞர்களும் வந்துள்ளனர். அவர்கள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.
அவர்கள்தான் மாட்டிறைச்சியைப் பதுக்கியிருக்க வேண்டும் என்று ஒரு கும்பல் அவர்களைச் சுற்றி வளைத்துள்ளது. மேலும், சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்துள்ளோம்.
இது தொடர்பாக ராம் சேனாவின் ஹலைவர் சுபம் பாகேலுடன் சேர்த்து 5 பேரை கைது செய்திருக்கிறோம். அனைவரும் நீதிமன்றக் காவலில் உள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னரும்கூட ராம் சேனாவின் சுபம் பாகேல் இதே குற்றத்துக்காக கைதாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.