Published : 04 Apr 2019 04:23 PM
Last Updated : 04 Apr 2019 04:23 PM

தெரியாமல் கோழிக்குஞ்சைக் காயப்படுத்திய சிறுவன்: கையில் இருந்த 10 ரூபாயுடன் மருத்துவமனைக்கு ஓடிய மனிதநேயம்- வைரலாகும் புகைப்படம்

உலகத்திலேயே மிகவும் தூய்மையான இதயத்தைக் கொண்டவர்கள் குழந்தைகள். அவர்கள் சட்ட விதிகளோ, சமுதாய மரபுகளோ தெரியாது. தங்களுக்குத் தெரிந்த செயல்களை எளிமையான வகையில் செய்வார்கள். ஒருவருக்குத் தெரியாமல் தீங்கிழைத்துவிட்டாலும் கூட துடிதுடித்துப் போவார்கள். பெரியவர்களாக நாம் வளர வளர கைவிட்டுவிடும் பண்பு அது.

 

மிசோரத்தின் சைராங் பகுதியைச் சேர்ந்த சிறுவன் டெரிக் சி லால்சனிமா. 6 வயதான டெரிக், சில நாட்களுக்கு முன்னதாக வீட்டுக்கு முன்பாக சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். அப்போது பக்கத்து வீட்டுக் கோழிக் குஞ்சின்மீது டெரிக்கின் சைக்கிள் ஏறிவிட்டது.

 

உடனே துடிதுடித்துப்போன டெரிக், கோழிக்குஞ்சை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான். கோழிக்குஞ்சைப் பார்த்த டெரிக்கின் அப்பா, அது இறந்துவிட்டதை உணர்ந்தார். மகனிடம் சொன்னால் வருத்தப்படுவான் என்று சொல்லாமல் மறைத்தார். கோழிக்குஞ்சு உயிரிழந்ததை அறியாத டெரிக், அதை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று சிகிச்சை செய்யவேண்டும் என்றான். ஆனால் டெரிக்கின் அப்பாவோ, கையில் 10 ரூபாயைக் கொடுத்து சிறுவனையே மருத்துவமனை செல்லுமாறு கூறினார்.

 

மருத்துவமனையில் இருந்த நர்ஸ், டெரிக்கின் அப்பாவித் தனத்தையும் மனிதநேயத்தையும் கண்டு வியந்தார். உண்மையை விளக்கினார். அப்போது கையில் கோழிக்குஞ்சுடன் டெரிக்கை அவர் எடுத்த படம் இணையத்தில் வைரலானது. இதைக் கண்ட டெரிக்கின் பள்ளி நிர்வாகம், சிறுவனுக்கு சால்வை போர்த்தி, சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது.

 

இந்த குட்டி சிறுவனுக்கு இருக்கும் அர்ப்பணிப்பும் நேர்மையும் பாதியளவுக்காவது வளர்ந்த நமக்கு இருந்தால் போதும். உலகம் அழகாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x