

மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவுக்கு பெங்களூர் செஷன்ஸ் நீதிமன்றம் திங்கள் கிழமை நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கியது.
ஒவ்வொரு மாதமும் 15 மற்றும் 30-ம் தேதிகளில் போலீஸார் முன்பு ஆஜராக வேண்டும் என்றும் வழக்கின் மீதான விசாரணை முடியும் வரை தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கார்த்திக் கவுடா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி கன்னட நடிகை மைத்ரி கவுடா போலீஸில் புகார் செய்தார். இதன் அடிப்படையில், பாலியல் பலாத்காரம், மோசடி, கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் 8-வது கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. தலைமறைவாக உள்ள அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதற்கிடையே முன் ஜாமீன் கோரி கார்த்திக் சார்பில் வழக்கறிஞர் உமேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுகுறித்து சதானந்த கவுடா கூறும்போது, “சட்டம் தன் கடமையைச் செய்யும் என பல தடவை கூறி வந்துள்ளேன். அதற்குமேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை” என்றார்.