

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவில் இருந்து மூத்த நீதிபதி என்.வி.ரமணா தன்னை விடுவித்துக்கொண்டார்.
மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் என்.வி.ரமணா, நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோரை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் நியமித்திருந்தார்.
ஆனால், புகார் அளித்த பெண், அளித்த கோரிக்கை மனுவில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகயும், நீதிபதி ரமணாவும் நண்பர்கள் என்பதால், அவரை நீக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதை ஏற்று நீதிபதி என்.வி.ரமணா தன்னை குழுவில் இருந்து விடுவித்துக்கொண்டார்.
இந்த நீதிபதிகள் குழு முன் நாளை புகார் அளித்த பெண் நேரில் ஆஜராகுவார் எனத் தெரிகிறது.
பாலியல் புகார்
உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் , கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாகக் கூறி இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டு நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் அத்துமீறல் புகார்களை தெரிவித்தார். இந்தப் புகார்களை உச்ச நீதிமன்றத்தில் உள்ள 22 நீதிபதிகளுக்கும், அந்தப் பெண் பிரமாணப் பத்திரமாக அனுப்பினார்.
இதைத்தொடர்ந்து அந்தப் புகார் சனிக்கிழமை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. ஆனால், நீதிபதிகள் உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை.
3 நீதிபதிகள் குழு
இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரையின் அடிப்படையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மிக மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது. அந்த அமர்வில் மூத்த நீதிபதி என்.விரமணா, பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றனர்.
என்ன காரணம்?
இந்நிலையில் புகார் அளித்த பெண், விசாரணைக் குழுவில் நீதிபதி என்.வி.ரமணா இடம் பெற்றிருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்து விசாரணைக் குழு தலைமை நீதிபதி பாப்டேவுக்கு கடிதம் எழுதினார். அதில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வீட்டில் தான் பணியாற்றி வரும்போது, அங்கு நீதிபதி என்.வி. ரமணா அடிக்கடி அங்கு வருவார். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் நண்பர்களாக இருக்கும் போது விசாரணையின் தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், விசாரணைக் குழுவில் ஒரே ஒரு பெண் நீதிபதி இந்திரா பானர்ஜி மட்டும் இருக்கிறார்.
ஆனால், விசாகா குழு விதிமுறைகளின்படி, விசாரணைக் குழு அமைக்கப்படவில்லை. விசாகா வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பணியிடத்தில் பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுவில் பெரும்பான்மை பெண்கள் இடம் பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தான் நேரில் ஆஜராகும்போது, தன்னுடன் ஒரு வழக்கறிஞரை அழைத்துவர வேண்டும், விசாரணைக் குழு விசாரிக்கும் போது அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்
இந்நிலையில் புகார் அளித்த பெண்ணின் கோரிக்கையைப் பார்த்து நீதிபதி என்.வி.ரமணா தானாக முன்வந்து அந்த குழுவில் இன்று விலகுவதாக அறிவித்தார்.