

நக்சல்கள் ஆதிக்கம் செலுத்தும் சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகளின் வெடிகுண்டு தாக்குதலில் அப்பகுதி எம்.எல்.ஏ பீமா மாண்டவி உட்பட 5 பேர் பலியாகினர். இது குறித்த தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் எழுப்பிய கேள்விக்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் பதில் அளித்தார்.
ஷியாமாகிரி மலைப்பகுதியில் எம்.எல்.ஏ. பீமா மாண்டவியின் வாகனம் குவக்குண்டா நோக்கிச் சென்று கொண்டிருந்தது அப்போது மாவோயிஸ்ட்கள் ஐ.இ.டி வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர் இதில் பாஜக எம்.எல்.ஏ. பீமா மாண்டவை பலியானது கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் கூறியதாவது:
நான் நக்ஸல்களுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் பழங்குடியினர், அறிவு ஜீவிகள், வியாபாரிகள், அங்கு நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோருடன் பேச்சு நடத்த வேண்டும். அதாவது இந்தச் சாபத்தை முதல்கட்டமாக அனுபவித்து வருபவர்களிடையே பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றேன்.
மாவோயிஸ்ட்கள் பேச்சு வார்த்தை நடத்த சமீபத்தில் எனக்கு அழைப்பு விடுத்தனர், ஆனால் அவர்கள் ஆயுதங்களை கீழே போடாதவரை பேச்சுவார்த்தை இல்லை என்பதை தெளிவுபடுத்தினேன்.
பீமா மாண்டவி மரணம் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் அரசு தரப்பிலிருந்து எந்த ஒரு பாதுகாப்புக் குறைபாடும் நிச்சயமாக இல்லை. அந்தப்பக்கம் போகாதீர்கள், அங்கு போக முடியாது என்று போலீஸார் மாண்டவியை எச்சரித்தனர்.
இளம் போலீஸ் அதிகாரி ஒருவர் பீமா மாண்டவி செய்த வாக்குவாதத்தை பதிவு செய்துள்ளார், அவர்கள் எச்சரிக்கையைப் புறக்கணித்துச் சென்றனர்.
என்று கூறியுள்ளார் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்.