Published : 11 Sep 2014 10:17 am

Updated : 11 Sep 2014 10:17 am

 

Published : 11 Sep 2014 10:17 AM
Last Updated : 11 Sep 2014 10:17 AM

இந்த ஒத்துழைப்பு எதற்காக?

ஆஸ்திரேலியாவுடனான உறவில் ஒரு முக்கியமான அத்தியாயம் கடந்த வாரம் எழுதப்பட்டிருக்கிறது. அமைதி நோக்கத்தில், மின்சாரம் தயாரிப்பதற்காக அணுசக்தியைப் பயன்படுத்தும் இந்தியாவுக்கு, தேவைப்படும் மூலப்பொருளை வழங்குவதை உறுதி செய்யும் ஒப்பந்தந்தத்தில் ஆஸ்திரேலியா கையெழுத்திட்டிருக்கிறது. ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்டின் வருகையின்போது, இந்திய அணு மின்நிலையங்களுக்குத் தேவைப்படும் மூலப்பொருளைக் கொடுப்பதற்கும் ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது இது அணு மின்நிலையங்களுக்கான மூலப்பொருள் தொடர்பான விஷயம்போலத் தோன்றலாம். ஆனால், சர்வதேச அரங்கில் அரசியல் காய்நகர்த்தல்களில் ஒன்றுதான் இது என்பதே உண்மை. சீனாவும் இந்தியாவும் ஆசியாவில் இப்போது வளர்ந்துவரும் பெரிய நாடுகளாகப் பார்க்கப்படுகின்றன. சீனாவுடன் இணக்கமான உறவை வைத்துக்கொள்ளவே ஜப்பானும் இந்தியாவும் விரும்பினாலும், எல்லைப் பகுதிகள் தொடர்பாக ஏற்படும் கருத்து வேற்றுமைகளால் அவ்வப்போது சலசலப்புகளும் ஏற்படுகின்றன. சீனாவுடன் உறவு வைத்திருந்தாலும் ராணுவரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அந்நாடு வலுவடைவதை அமெரிக்கா விரும்பவில்லை. எனவே, சீனாவுக்கு எதிரான அணியை வலுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. அமெரிக்காவின் கண்ஜாடைக்குப் பிறகுதான் ஆஸ்திரேலியப் பிரதமர் இந்தியா வந்திருக்கிறார்.

1998-ல் பொக்ரானில் அணுகுண்டை வெடித்து இந்தியா சோதனை நடத்தியதை ஆஸ்திரேலியா வன்மையாகக் கண்டித்தது. “அணு ஆயுதம் தயாரிக்கும் எண்ணமோ அதில் போட்டியிடும் எண்ணமோ இல்லை” என்று இந்தியா உறுதிபடத் தெரிவித்த பிறகே 2005-ல் அணுசக்தியை மக்களுடைய நன்மைக்குப் பயன்படுத்தினால் ஒத்துழைக்கத் தயார் என்று முன்வந்து ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டது. இந்தியாவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் அதன்பின்னர் நீக்கப்பட்டன. இப்போது ஆஸ்திரேலியா, மக்கள் பயன்பாட்டுக்கான அணுசக்திக்குத் தேவைப் படும் மூலப்பொருளை வழங்கத் தயார் என்று முன்வந்துள்ளது.

சுனாமியால் ஜப்பானின் புகுஷிமா அணு மின்நிலையம் கடுமையாகச் சேதம் அடைந்து கதிரியக்கம் வெளிப்பட ஆரம்பித்ததை அடுத்து, ‘அணு மின்நிலையங்கள் வேண்டாம்’ என்ற குரல்கள் உலகம் முழுக்க வலுத்துவருகின்றன. இதனால் ஆஸ்திரேலியாவின் யுரேனியத்துக்குக் கேட்பு குறைந்துவிட்டது. ஆஸ்திரேலியாவுக்கு யுரேனியம்தான் பெரும் வருவாயை ஈட்டித்தந்தது. இப்போது நாட்டின் வருமானத்தைப்

பெருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் யுரேனியத்தை விற்க ஆஸ்திரேலியா முன்வந்திருக்கிறது. அணு மின்சாரம் தயாரிப்பில் உதவுவதாக ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, மோடியிடம் வாக்குறுதி தந்திருப்பதையும் மறந்துவிடலாகாது. அணு மின்நிலையங்கள் குறித்து உலகம் முழுக்க அச்சம் நிலவினாலும் இந்தியாவால் அவற்றைக் கைவிட முடியாத அளவுக்கு இங்கே மின்சாரப் பற்றாக்குறை நிலவுகிறது. எனவேதான், இந்தியாவுக்குச் சாதகமானவர்களிடம் இருந்து அணு மின்சாரத் தயாரிப்புக்கான ஒத்துழைப்பைப் பெறுவதில் மோடி தீவிரம் காட்டுகிறார்.

அணு மின்சாரத் தயாரிப்புக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளை நம்பியிருக்கிறது இந்தியா. கனநீர் அணு உலைகளை ரஷ்யா அளித்திருக்கிறது. மென்நீர் அணுஉலைகளையும் விரைவு அணுப்பெருக்க ஈனுலைகளையும் மேற்கத்திய நாடுகள் வழங்கியிருக்கின்றன. அணுகுண்டு தயாரிக்கும் எண்ணம் இல்லை என்று வெளிப்படையாக அறிவித்ததுடன் சுய கட்டுப்

பாட்டுடன் நடந்துகொள்வதாலும் சர்வதேச அணுவிசை முகமையின் ஆய்வுகளுக்குக் கட்டுப்படத் தயார் என்று முன்னரே அறிவித்துவிட்டபடியாலும் இப்போது மோடிக்கு வேலை எளிதாகிவிட்டது.

ஆனால், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அணுமின் நிலையங்களைப் படிப்படியாக மூடிவருவதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அணு மின்நிலையத்தில் கதிரியக்க அபாயம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; விபத்து, தாக்குதல் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் எடுக்க வேண்டிய மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும், அணுஉலைக் கழிவுகளைக் கொட்டுவதற்கு இடம் தேட வேண்டும். இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது இந்த ஒப்பந்தங்களால் எப்படி மகிழ்ச்சி அடைய முடியும்?

அணுமின்நிலையங்கள்இந்தியா-ஆஸ்திரேலியா ஒப்பந்தம்மின்சாரம் தயாரிப்புபுகுஷிமா அணு மின்நிலையம்

You May Like

More From This Category

More From this Author