

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி, தனது இந்த பயணத்தின் முக்கிய நிகழ்ச்சியாக ஐ.நா.வில் நேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது: ஐ.நா. சபையில் பிரதமராக பங்கேற்று பேசுவது எனக்கு பெருமை அளிக்கிறது. நாடுகள் கடைப்பிடித்து வரும் கொள்கைகள் குறித்து பேச நான் இங்கு வரவில்லை. ஒவ்வொரு நாட்டுக்கும் அதற்கென தனி கோட்பாடு உண்டு. அதுதான் அந்த நாட்டை வழி நடத்தும். இந்த உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்தியாவின் தத்துவம். இந்திய மக்களின் நம்பிக்கையும், உள்ளத்தில் உள்ள பேரார்வத்தையும் நான் அறிந்துள்ளேன். 125 கோடி மக்களை கொண்ட இந்தியாவிடம் இருந்து இந்த உலகம் என்ன எதிர்பார்க்கிறது என்பதையும் அறிவேன்.
இப்போது இங்கு 193 நாடுகளின் தேசியக் கொடிகள் பறக்கின்றன. கடந்த ஆண்டுகளில் நாம் பல விஷயங்களை சாதித்துள்ளோம். இந்தியாவின் எதிர்காலம் அண்டை நாடுகளையும் சார்ந்துள்ளது. எனவேதான் எனது அரசு அண்டை நாடுகளுடன் சிறப்பான உறவை மேம்படுத்த அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. தீவிரவாதம் இப்போது புதுப்புது வழிகளில் உருவெடுக்கிறது. உலகின் அனைத்து நாடுகளுமே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனினும் சில நாடுகள் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகின்றன.
உலக நாடுகள் அனைத்துமே சர்வதேச விதிகளையும், ஒழுங்குகளையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவும் நாம் இங்கு கூடியுள்ளோம். ஐ.நா. அமைதிப்படைக்கு மேலும் வலு சேர்க்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து உலகின் அமைதிக்கும், வளமைக்கும் பாடுபட வேண்டும். ஐ.நா. என்ற சிறப்பான அமைப்பு இருக்கும்போது ஜி4, ஜி7 போன்ற பல்வேறு அமைப்புகள் நமக்கு எதற்கு?
காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா.வில் எழுப்புவதால் எந்த தீர்வும் கிடைத்துவிடாது. அமைதியான சூழ்நிலையில் பாகிஸ்தானுடன் பேச்சு நடைபெற வேண்டுமென்று இந்தியா விரும்புகிறது. இதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தும் கடமை பாகிஸ்தான் உண்டு. பாகிஸ்தானில் இருந்து நிகழும் தீவிரவாத நடவடிக்கைகள் அமைதிப் பேச்சுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. சமீபத்தில் பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது இந்தியா தானாகவே முன்வந்து நிவாரண உதவிகளை வழங்கியது. இவ்வாறு தனது உரையில் மோடி குறிப்பிட்டார்.
ஐ.நா.வில் இப்போதுதான் மோடி முதல்முறையாக பேசியுள்ளார்.