Last Updated : 14 Apr, 2019 01:03 PM

 

Published : 14 Apr 2019 01:03 PM
Last Updated : 14 Apr 2019 01:03 PM

பெரு நிறுவன முதலாளிகளுக்கு ரூ.5.5 லட்சம் கோடி வங்கிக் கடன் தள்ளுபடி செய்த மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

தங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் நட்புறவோடு இருக்கும், பெருநிறுவனங்களின் முதலாளிகளுக்கு ரூ.5.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது பிரதமர் மோடி தலைமையிலான அரசு என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ஒட்டுண்ணி முதலாளித்துவத்துக்கு மிகமோசமான உதாரணமாக மோடியின் அரசு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி புதுடெல்லியில் நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 5 ஆண்டுகளில் தங்களுக்கு வேண்டிய, நெருக்கமான, நட்புறவான தொழிலதிபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ரூ.5.5 லட்சம் கோடி வங்கிக்கடனை தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி தள்ளுபடி செய்த நிலையில் அதில் மோடி அரசு மட்டும் ரூ.5.5 லட்சம் கோடி வங்கிக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. ஏறக்குறைய 80 சதவீதம் மோடி அரசில்தான் வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது ஒட்டுண்ணி முதலாளித்துவத்தின் மிகமோசமான உதாரணம்.

சராசரியாக ஆண்டுக்கு ரூ.ஒருலட்சம் கோடிக் கடன் பெரு நிறுவன முதலாளிகளுக்காக கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு லட்சம் கோடிகளில் கடனைத் தள்ளுபடி செய்தால், மறுமுதலீடு உருவாக்கத்துக்கு வரி செலுத்துவோரின் பணத்தை எடுத்தும் என்ன பயன்?  பாஜக அரசு என்ன செய்யப் போகிறது?

மோடியின் வலது கை ஒருபுறம் பெருநிறுவன முதலாளிகளுக்கு கடனைத் தள்ளுபடி செய்கிறது, இடதுகை, மறுமுதலீட்டுக்கு வழி செய்கிறது. இது நகைப்புக்குரியது, மோசடியானது, மிகமோசமான கபடநாடகம். இரட்டை வேடத்துடன், இரட்டை குரலுடன் செயல்படும் இந்த அரசை தண்டிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று நான் எண்ணுகிறேன்.

மோடி அரசு எந்தெந்த நிறுவனங்களுக்கு, பெருமுதலாளிகளுக்கு வங்கிக்கடன் தள்ளுபடி செய்தது எனும் பட்டியலை வெளியிட வேண்டும். தங்களுக்கு தேவையான, நெருக்கமான பெருமுதலாளிகளுக்கு மட்டும் ரூ.5.5. லட்சம் கோடி வங்கிக்கடனைத் தள்ளுபடி செய்துவிட்டு, சாமானிய மக்கள் மீது விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் திணிக்கக்கூடாது.

உங்களால் நிச்சயம், வங்கிகடன் தள்ளுபடி செய்த நிறுவனங்கள், முதலாளிகள் பெயரை வெளியிட முடியாது, அதற்கான வாய்ப்பும் இல்லை. ஏனென்றால், அவ்வாறு வெளியிட்டால் மோடி அரசின் உண்மையான, ஒட்டுண்ணி முதலாளித்துவ முகத்தை வெளிப்படுத்திவிடும்.

இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, தேர்தலை மனதில் வைத்து, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெருமுதலாளிகளுக்கு ரூ.1.56 லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x