Last Updated : 27 Apr, 2019 12:00 AM

 

Published : 27 Apr 2019 12:00 AM
Last Updated : 27 Apr 2019 12:00 AM

வாரணாசியில் மோடியை பிரியங்கா எதிர்க்காதது ஏன்?

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா விருப்பம் காட்டி வந்தார். ஆனால், அங்கு அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாததன் பின்னணியில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரபிரதேசத்தின் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் முன்னாள் எம்.எல்.ஏ.வான அஜய்ராய் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

2014 தேர்தலிலும் மோடியை எதிர்த்து போட்டியிட்ட ராய், வெறும் 75,614 வாக்குகள் பெற்றிருந்தார். இவருடன் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான அர்விந்த் கேஜ்ரிவால், சுமார் 2 லட்சம் வாக்குகளுடன் இரண்டாம் இடம் வகித்திருந்தார். இங்கு வெற்றி பெற்ற மோடிக்கு 5.81 லட்சம் வாக்குகள் கிடைத்திருந்தன.

இந்த முறை, காங்கிரஸ் சார்பில் மோடியை எதிர்க்க தான் தயாராக இருப்பதாக ரேபரேலியின் பிரச்சாரத்தில் பிரியங்கா அறிவித்திருந்தார். இதுதொடர்பான கேள்விக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

இதனால், வாரணாசியில் பிரியங்கா போட்டியிடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அவரை அங்கு நிறுத்தாதது, காங்கிரஸின் தோல்வி பயத்தை காட்டுவதாக பேச்சுக்கள் உலவுகின்றன. இவற்றை மறுக்கும் வகையில் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘பிரியங்காவின் வாரணாசி போட்டிக்கு நாளேடுகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் சாதகமான செய்திகள் வெளியிட்டு எங்களை உற்சாகப்படுத்தின. ஆனால், அங்கு நடத்திய ரகசிய சர்வேயில் பிரியங்கா போட்டியின் தாக்கம் உ.பி.யின் மற்ற தொகுதிகளிலும் ஏற்படும் என தெரிந்தது. அதில், சுமார் 60 தொகுதிகளில் மெகா கூட்டணிக்கும், எங்களுக்கும் இடையே வாக்குகள் பிரிந்து பாஜகவை பலப்படுத்தி விடும் எனவும், இது தெரிந்ததால் பிரியங்கா போட்டியிடுவது கைவிடப்பட்டுள்ளது.’ எனத் தெரிவித்தனர்.

உ.பி.யில் எதிரும், புதிருமாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதியும் இணைந்து அதன் 80 தொகுதிகளிலும் மெகா கூட்டணி அமைத்துள்ளன.

அஜித்சிங்கின் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்த்தவர்கள் காங்கிரஸை ஒதுக்கி வைத்தனர். எனினும், 2009-ல் பெற்ற 21 தொகுதிகளில் மட்டும் தன் வெற்றியை எதிர்பார்த்து அக்கட்சி கடுமையாக பிரச்சாரம் செய்கிறது. மீதியுள்ளவற்றில் பாஜக வாக்குகளை பிரிக்கும் விதத்தில் பிராமணர், தாக்கூர் உள்ளிட்ட உயர்சமூகத்தின் வேட்பாளர்களை நிறுத்தி வருகிறது. இதன்மூலம், மெகா கூட்டணி வென்றாலும் பாஜகவை தோற்கடிப்பது காங்கிரஸின் நோக்கமாக உள்ளது.

இதனிடையே, வாரணாசியில் பிரியங்கா போட்டியிட மெகா கூட்டணியுடன் ஆம் ஆத்மியும் தனது வேட்பாளர்களை நிறுத்தாமல் ஆதரவளிக்கும் என காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால், மெகா கூட்டணி சார்பில் சமாஜ்வாதியின் ஷாலினி யாதவ் 3 தினங்களுக்கு முன் நிறுத்தப்பட்டுள்ளார்.

அகிலேஷிடம் இங்கு வேட்பாளரை நிறுத்தும்படி மாயாவதியும் வலியுறுத்தி வந்துள்ளார். ஏனெனில், இங்கு மட்டும் ஆதரவளித்தால் உ.பி. வாக்காளர்கள் குழப்பம் அடைந்து விடுவார்கள் எனவும், அதன்மூலம் பாஜக லாபம் பெறும் என்றும் அஞ்சியதாகவும் கருதப்படுகிறது.

ராகுலின் அமேதி, சோனியாவின் ரேபரேலியில் மட்டும் வேட்பாளர் நிறுத்தாதமைக்காக காங்கிரஸ் மெகா கூட்டணி தலைவர்கள் தொகுதிகளில் போட்டியிடாமல் ஒதுங்கி இருக்க முன்வந்தது. இதற்கு மாயாவதி, காங்கிரஸின் உதவி தேவையில்லை எனும் வகையில் அறிக்கை அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x