பெங்காலில் பாஜகவுக்கு ரசகுல்லாதான் கிடைக்கும்: மம்தா நகைச்சுவை

பெங்காலில் பாஜகவுக்கு ரசகுல்லாதான் கிடைக்கும்: மம்தா நகைச்சுவை
Updated on
1 min read

பெங்காலில் நரேந்திர மோடி பாஜகவுக்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் வெற்றிபெறும் என்று பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார்; ஆனால் அவருக்கு ரசகுல்லாதான் கிடைக்கப் போகிறது என்று மம்தா நகைச்சுவையாக பேசியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதியான தக்ஷின் தினாஜ்பூர் மாவட்டத்தில் பாலுர்காட் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

அப்போது அவர் ஒருபொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தாங்கள் வெற்றிபெற்றால் மேற்கு வங்க இரு கைகளிலும் லட்டு கிடைக்கும் என்று கூறிவருகிறார். ஆனால் அது ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை. டெல்லியில் லட்டு சாப்பிட்ட எவரும் வருத்தப்படப் போகிறார்கள். மேற்கு வங்கத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய ஜீரோ கிடைக்கப் போகிறது.

பாஜக சொல்வதை பெரியதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் ஆட்சிக்கே வரப்போவதில்லை.

ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் எந்த இடத்தையும் அவர்கள் வெல்ல மாட்டார்கள். நாட்டில் 100 இடங்களைக்கூட பெற முடியாத நிலைதான் பாஜகவுக்கு ஏற்படப் போகிறது.

பிரதமர் மோடி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சாய்வாலாவாக தன்னை காட்டிக்கொண்டார். இப்போது சவுக்கிதார் என்று சொல்கிறார். தேர்தல் முடிந்தபிறகு அவருடன் சவுக்கிதான் இருக்கப் போகிறது (சவுக்கி என்றால் கட்டில்). பாஜக மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் நாம் சுதந்திரமாக பேசுவதற்குக் கூட உரிமை இல்லாமல் செய்துவிடுவார்கள். அவர்கள் இப்போதே நிறைய அட்டூழியங்களை  செய்துவருகிறார்கள். அவர்களுக்கு வாக்களிப்பது பயனற்றது.

மேற்கு வங்கத்தில் 2016 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தங்கள் இரு கைகள் நிறைய லட்டு கிடைக்கும் என்றார். அதாவது ஒரு கையில் மத்தியில் தேசிய ஜனநாயகக் கட்சியின் ஆட்சியாம் இன்னொரு கை நிறைய மாநிலத்தில் பாஜக ஆட்சியாம்.

ஆனால் என்ன கிடைத்தது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் பாதி இடங்களாவது வெற்றிபெற வேண்டும் என்று இலக்கு வைத்தது.

2014ல் அவர்கள் இரண்டு இடங்களே வெற்றிபெற்றனர். வரும் தேர்தலில் அதுவும் கிடைக்கப் போவதில்லை. அவர்களுக்கு ரசகுல்லாதான் (ஜீரோ)தான் கிடைக்கும்.

இவ்வாறு பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார்.

மேற்கு வங்கத்தில் ஒரு இனிப்புப் பண்டமாக ரசகுல்லா உள்ளது. அதேநேரம் யாராவது பரீட்சையில் பூஜ்யம் எடுக்கும்போதும் கிண்டலடிக்க ரசகுல்லாவை குறிப்பிடுவது வழக்கம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in