Last Updated : 21 Apr, 2019 04:31 PM

 

Published : 21 Apr 2019 04:31 PM
Last Updated : 21 Apr 2019 04:31 PM

பாபர் மசூதி குறித்து சர்ச்சைக் கருத்து: பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாக்கூருக்கு தேர்தல் ஆணையம் 2-வது நோட்டீஸ்

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைத் தெரிவித்த பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாக்கூருக்கு தேர்தல் ஆணையம் 2-வது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2006-ம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு குற்றச்சாட்டில் சிக்கி இருந்த சாத்வி பிரக்யா தாக்கூர் தற்போது ஜாமீனில் உள்ளார். தற்போது  போபால் மக்களவைத் தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் சாத்வி பிரக்யா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு சாத்வி பிரக்யா தாக்கூர் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடித்த சம்பவத்தில் நானும் இருந்தேன் என்பதை நினைத்து  பெருமைப்படுகிறேன். ராமரின் மண்ணில் இருந்து ஒரு கறை அகற்றப்பட்டுள்ளது. கடவுள் எனக்கு இந்த வாய்ப்பை அளித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். அந்த இடத்தில் நிச்சயம் ராமர் கோயில் கட்டுவோம்" எனத் தெரிவித்திருந்தார்.

இரு சமூகங்களுக்கு இடையே மோதலை தூண்டும் விதத்திலும், மதத்தை பயன்படுத்தியும் பேசியதாக தேர்தல் ஆணையம் சாத்வி பிரத்யா தாக்கூருக்கு நோட்டீஸ் அனுப்பி, நாளைக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ஏடிஎஸ் தலைவர் ஹேமந்த் கர்கரே தனக்கு கொடுமை செய்ததால், அவரை சபித்தேன் என்று தெரிவித்திருந்தார். பின்னர் தனது ஹேமந்த் கர்கரே தியாகிக்கான விருது பெற்றவர் என்று தெரிந்தவுடன் தனது வார்த்தைகளை தாக்கூர் திரும்பப் பெற்றுக்கொண்டார். இது குறித்து பாஜக எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கவும் தேர்தல் ஆணையம், சாத்விக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x