இலங்கையில் நடந்த கொடூர குண்டுவெடிப்பு: இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் பலி

இலங்கையில் நடந்த கொடூர குண்டுவெடிப்பு: இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் பலி
Updated on
1 min read

இலங்கையில் நேற்று நடந்த கொடூர குண்டுவெடிப்பில் இந்தியர்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர். அந்போது, பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.

கொழும்பு நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் தேவாலய கட்டத்தின் சில பகுதிகள் வெடித்து சிதறின.

அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். எங்கும் ரத்த வெள்ளமாக காணப்பட்டது. காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த குண்டுவெடி்பபு நடந்த சற்று நேரத்தில் கொழும்பு நகரில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்தன.

இதனைத் தொடர்ந்து நீர்கொழும்புவில் பகுதியில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயத்திலும் குண்டுவெடித்தது. பின்னர் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு நகரில் உள்ள சியான் தேவாலயத்திலும் பயங்கர தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.

இந்த குண்டுவெடிப்புகளில் இந்தியர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில், லட்சுமி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகிய 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களுக்காக காத்திருக்கிறோம்’’ என தெரிவித்தள்ளார். இவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா இருக்கலாம் என தெரிகிறது.

இதைத்தொடர்ந்து மேலும் ஹனுமந்தப்பா, ரங்கப்பா ஆகிய இரு இந்தியர்களும் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதாக சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து இலங்கையில் அமல்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுபோலவே சமூகவலைதளங்களை தொடர்ந்து முடக்கி வைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in