

7-வது ஊதிய கமிஷன் இடைக்கால நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தவுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.துரைப்பாண்டியன் கூறியதாவது:
ஒவ்வொரு முறை ஊதிய கமிஷன் அமைக்கும்போதும், இடைக்கால நிவாரணம் அறிவிக்கப்படும். ஆனால், தற்போது அமைக்கப்பட்டுள்ள 7-வது ஊதிய கமிஷன்படி, எங்களுக்கு இன்னமும் இடைக்கால நிவாரணம் அறிவிக்கப்படவில்லை, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களின் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை நிறுத்த வேண்டும்.
மேலும், ரயில்வே, வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் (ஜம்மு-காஷ்மீர் தவிர்த்து) இன்று தர்ணா போராட்டம் நடத்தவுள்ளோம். சென்னையில் உள்ள சாஸ்திரி பவனில் தர்ணா போராட்டம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.