Published : 15 Apr 2019 12:44 pm

Updated : 15 Apr 2019 12:44 pm

 

Published : 15 Apr 2019 12:44 PM
Last Updated : 15 Apr 2019 12:44 PM

பாஜக வளர்ந்த கதை: முகர்ஜி முதல் மோடி வரை...

பாஜக இன்று நாடுமுழுவிய அளவில் வலிமையான அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ளது. அதிகமான மாநிலங்களில் ஆட்சி நடத்தும் கட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. ஆனால் இன்றைய பாஜகவுக்கான விதை சுதந்திரத்துக்கு முன்பே விதைக்கப்பட்டு விட்டது. இதற்கு சுதந்திரப் போராட்ட வரலாற்றை புரட்ட வேண்டும்.

சுதந்திரத்துக்கு முன்பு இந்திய அரசியலை உலுக்கிய இந்து - முஸ்லிம் என்ற அணி திரட்டல் மிக முக்கியமானது. முகமது அலி ஜின்னாவின் முஸ்லிம் லீக் ஏற்படுத்திய தாக்கங்களும் அதற்கு எதிர் அரசியலும் விடுதலை இயக்கத்திலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தின.

குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த சம்பவங்கள் மதவாத அரசியலை வேகமாக நகர்த்தின. முஸ்லிம் லீக்கின் அரசியலை எதிர்கொள்ளும் அமைப்பாக இந்து மகாசபா இருந்து வந்தது. நாடு சுதந்திரமடைந்த பிறகு இந்து மகாசபா செல்வாக்கை இழந்த நிலையில் ஆர்எஸ்எஸ் தனது இந்துத்துவக் கொள்கையை, அரசியல் தளத்தில் எடுத்துச் செல்ல தனியான அரசியல் கட்சி தேவை என எண்ணியது.

காங்கிரஸில் தீவிர வலதுசாரி அரசியலால் ஈர்க்கப்பட்டவர் சியாம் பிரசாத் முகர்ஜி. சுதந்திரத்துக்குப் பிறகு நேருவின் இடைக்கால அரசில் அமைச்சராக இருந்த அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாரதிய ஜனசங்கத்தைத் தொடங்கினார். புதிய இந்துத்துவ அரசியல் கட்சியான பாரதிய ஜனசங்கத்துக்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை அளித்து முழு ஒத்துழைப்பு அளித்தது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூத்த நிர்வாகியாக இருந்த தீனதயாள் உபாத்யாயா பாரதிய ஜனசங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பால் உருவாக்கப்பட்ட அப்போதைய இளம் தலைவர்களான அடல் பிஹாரி வாஜ்பாய், அத்வானி போன்றோரும் ஜனசங்கத்தின் முக்கிய பொறுப்புகளை ஏற்று கட்சியை வழி நடத்தினர்.

இருப்பினும், 1951- 52 ஆம் ஆண்டு நடந்த முதல் பொதுத் தேர்தலில் வெறும் 3 இடங்களில் மட்டுமே பாரதிய ஜனசங்கம் வெற்றி பெற்றது. அதன் பிறகு 1967-ம் ஆண்டு வரை ஜனசங்கம் பெரிய அளவில் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் கட்சியின் ஆதரவு தளத்தை விரிவடையச் செய்வதில் அதன் தலைவர்கள் கவனம் செலுத்தினர். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கோரி ஜனசங்கம் தொடர்ச்சியாக நடத்திய போரட்டம் அக்கட்சியின் செயல்பாடுகளை ஊக்குவித்தது.

சியாம் பிரசாத் முகர்ஜியின் மரணத்துக்குப் பிறகு தீனதயாள் உபாத்யாயா கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதனைத் தவிர இந்தக் காலகட்டத்தில், இந்துத்துவ அடையாளத்துக்கு அப்பாற்பட்டு இந்தியாவின் பாரம்பரியம் சார்ந்த கொள்கையை சுவீகரித்து அரசியல், சமூக, பொருளாதார சித்தாந்தங்களை அதன் தலைவர்கள் உருவாக்கினர்.

குறிப்பாக தீனதயாள் உபாத்யாவின் ஏகாத்ம மானவவாதம் எனப்படும் ஒன்றுபட்ட மனிதநேயம் என்ற கோட்பாடு இந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இதுவே தங்கள் தனித்துவ சித்தாந்தம் என இன்றைய பாஜக தலைவர்களும் பெருமையுடன் கூறுகின்றனர்.

நேருக்குப் பிந்தைய அரசியல்

நேருவின் மரணத்துக்குப் பிறகு 1967-ம் ஆண்டில் இந்திய அரசியல் புதிய பாதைகளை நோக்கிப் பயணப்பட்டது. குறிப்பாக காங்கிரஸில் இருந்த சோசலிஸ்ட் கொள்கை கொண்ட தலைவர்கள் புதிய அரசியல் அமைப்புகளை வலிமையாக்கி வந்தனர். இந்திரா காந்தியின் அரசியலை எதிர்த்த மொராஜ் தேசாய், சரண் சிங் போன்றவர்கள் காங்கிரஸுக்கு எதிராக மற்ற கட்சிகளை அணி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டனர். வட மற்றும் மத்திய இந்தியாவில் வலிமையான தளத்தைக் கொண்டிருந்த ஜனசங்கமும், அந்தத் தலைவர்களுடன் கைகோத்து அரசியல் செய்தது.

நெருக்கடி நிலை

இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலை இந்திய அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கியது. இடதுசாரி சிந்தனை கொண்ட சோசலிஸ்டுகளையும், தீவிர வலதுசாரி சிந்தனை கொண்ட ஜனசங்கத்தினரையும் ஓரணியில் கொண்டு வந்தது. நெருக்கடி நிலையை எதிர்த்து ஜெய பிரகாஷ் நாராயண் நடத்திய மக்கள் இயக்கத்தில் ஜனசங்கத் தலைவர்களும் தங்களை இணைத்துக் கொண்டு போராட்டம் நடத்தினர். சிறையில் சென்ற ஜனசங்கத் தலைவர்களுக்கு அங்கு சோசலிஸ்ட் தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் சூழல் உருவாகியது. இதன் மூலம் இந்திய அரசியலில் யாருடனும் தொடர்பு இல்லாமல் தனிப்பாதையில் சென்று கொண்டிருந்த ஜனசங்கத்துக்கு பொது அரசியலில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

இந்திராவுக்கு எதிராக உருவான மக்கள் இயக்கம் புதிய அரசியல் சக்தியாக ஜனதா கட்சியாக உருவெடுத்தது. இதில் ஜனசங்கமும் ஐக்கியமானது. மொராஜ் தேசாய் தலைமையிலான அரசில் ஜனசங்கத்தைச் சேர்ந்த வாஜ்பாய் வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆனால், ஜனதாவின் பயணம் நீண்டகாலம் நிலைக்கவில்லை.

ஜனதா கட்சித் தலைவர்களிடையே பல்வேறு காரணங்களால் முரண்பாடுகளும், மோதல்களும் ஏற்பட்டன. இதில் ஜனசங்கத்தைச் சேர்ந்தவர்கள் இரட்டை உறுப்பினர்களாக இருப்பதாகப் பிரச்சினை எழுந்தது. ஜனதா கட்சியின் தலைவர்களான வாஜ்பாய், அத்வானி போன்றோர், ஏற்கெனவே ஆர்எஸ்எஸ்ஸிலும் உறுப்பினராக இருப்பதாகப் பிரச்சினை எழுப்ப, அதுவும் ஜனதா கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தியது. ஜனதா ஆட்சி கவிழ்ந்த நிலையில் பழைய ஜனசங்கத் தலைவர்கள் அதில் இருந்து வெளியேறினர். பொதுத்தள அரசியல் ஏற்படுத்திய புகைச்சலை அடுத்து தங்களுக்கான தனித்துவ அரசியலை நோக்கி ஜனசங்கத் தலைவர்கள் நடைபோட்டனர்.

பாஜக பிறப்பு

1980-ம் ஆண்டு ஆர்எஸ்எஸ்ஸின் இந்துத்துவ தேசியத்தை அரசியல் தளத்தில் கொண்டு செல்லும் புதிய அரசியல் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உருவானது. பாஜகவின் முதல் தலைவராக வாஜ்பாய் பொறுப்பேற்றார். ஆர்எஸ்எஸ் ஆதரவுத் தளம் விரிவடைந்து இருந்ததாலும், பழைய ஜனசங்கத்தின் அமைப்புக்குக் கட்டமைப்பு இருந்ததாலும், தொடங்கப்பட்ட உடனேயே நாடு முழுவதும் கிளைகளுடன் அரசியல் கட்சியாக வளர்ந்தது.

ஆனாலும் பாஜக கண்ட முதல் தேர்தல் சோகமானது. இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு 1984-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அனுதாப அலையால் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது. முதல் தேர்தலில் பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் தோற்றுப்போயினர்.

அயோத்தி ராமஜென்மபூமி இயக்கம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி தொடங்கப்பட்ட ராமஜென்மபூமி இயக்கம் இந்துத்துவ அரசியலுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. பாஜக தலைவராக அத்வானி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு மிக வேகமான இந்துத்துவ அரசியல் பாதையில் பாஜக பயணம் செய்தது.

இந்த இயக்கத்தை முன்னிறுத்தி பாஜக வடக்கு, மேற்கு மாவட்டங்களில் வேகமாக வளர்ந்தது. 1990களில் நடந்த பல சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1991-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 120 இடங்களில் பாஜக வென்றது. அயோத்தி அமைந்த உத்தரப் பிரதேச மாநிலத்திலும் ஆட்சியைக் கைபற்றியது. அடுத்தடுத்த ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்ட பாஜக, காங்கிரஸுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்தது. காங்கிரஸ் - பாஜக என இருபெரும் தேசியக்கட்சிகளே இனி, என வர்ணிக்கும் அளவுக்கு அரசியல் ரீதியாக அதன் நிலை உயர்ந்தது.

வாஜ்பாய் அரசு

கட்சி வேகமாக வளர்ந்தாலும், காங்கிரஸ் முன்பு இருந்ததைப் போல தனியாக அறுதிப் பெரும்பான்மை பெருமளவுக்கு பாஜக வளரவில்லை. இருபெரும் தேசியக் கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் 1996-ம் ஆண்டு தேர்தலில் அதிக இடங்களை வென்றபோதும், வாஜ்பாய் அரசு 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. அதன் பிறகு கணிசமான இடங்களைப் பெற்றிருந்த மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைத்தன. தேவகவுடா, குஜரால் போன்றோர் பிரதமராகினர். ஆனாலும், ஆட்சி கவிழ்ந்தது. 1998-ம் ஆண்டு நாடு மீண்டும் பொதுத்தேர்தலைச் சந்தித்தது.

இந்தமுறை தனக்கு ஆதரவான மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் வாஜ்பாய் பிரதமரானார். தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, மதிமுக போன்ற கட்சிகள் வெற்றி பெற்று புதிய அரசில் இடம் பிடித்தன. எனினும் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா திரும்பப் பெற்றுக் கொண்டதால் இந்த முறை 13 மாதங்களில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. மீண்டும் 1999-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழகத்தில் திமுக உள்ளிட்ட புதிய கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்ட பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

கார்கில் போரில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து வாஜ்பாய்க்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 1999 ஆம் நடந்த பொதுத் தேர்தலில் 303 இடங்களில் வென்றது. பாஜக மட்டுமே 183 இடங்களில் வென்றது. வாஜ்பாய் மூன்றாவது முறையாகப் பிரதமராகவும், அத்வானி துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். இம்முறை, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது ஆட்சிக்காலமான ஐந்து ஆண்டுகள் வரை நீடித்தது. வாஜ்பாய் தலைமையில் யஷ்வந்த் சின்ஹாவை நிதி அமைச்சராகக் கொண்ட இந்த அரசு, பி.வி.நரசிம்ம ராவ் அரசு தொடங்கிய பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தியது.

2002-ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் அதனைத் தொடர்ந்து நடந்த பெரிய கலவரம் குஜராத் பாஜக அரசை மட்டுமல்லாமல், மத்திய பாஜக அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. கூட்டணி அரசியலுடன், இந்துத்துவ அரசியல் என பாஜகவின் 5 ஆண்டுகாலப் பயணம் நிறைவடைந்தது.

காங்கிரஸ் புதிய வியூகம்

இதற்கு முன்பு வரை பின்னால் இருந்து மட்டுமே மாநிலக் கட்சிகளுக்கு ஆதரவு அளித்து வந்த காங்கிரஸ், பாஜக தேர்ந்தெடுத்த பாதையில் பயணத்தைத் தொடங்கியது. தனித்துப் போட்டியிட்டு அதிகமான இடங்களைப் பெற முடியாத சூழலில் இணக்கமான மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து 2004-ம் ஆண்டு தேர்தலைச் சந்தித்தது. முந்தைய வாஜ்பாய் அரசில் இடம் பெற்றிருந்த திமுக உள்ளிட்ட சில மாநிலக் கட்சிகள் இந்தமுறை காங்கிரஸுடன் கரம் கோத்தன.

145 இடங்களில் வென்ற காங்கிரஸ் மாநிலக் கட்சிகள் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. அக்கட்சி 138 இடங்களில் மட்டுமே வென்றது. ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த வாஜ்பாய் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள, நாடாளுமன்றத்தில் அத்வானியின் தலைமையில் பாஜக எதிர்க்கட்சியாக அமர்ந்தது.

2009-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அத்வானியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி களம் கண்டது. ஆனால் 2004-ம் ஆண்டு பெற்ற இடங்களை விடவும் குறைவாக 116 இடங்களில் மட்டுமே பாஜக வென்றது. மீண்டும் 5 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது பாஜக. மாநிலக் கட்சிகளின் வலிமையான கூட்டணியை வைத்திருந்த காங்கிரஸ் 206 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியமைத்தது. மன்மோகன் சிங் மீண்டும் பிரதமரானார்.

தொடர்ந்து 2 முறை பதவியில் இருந்த காங்கிரஸ் அரசின் ஊழல்களை மையப்படுத்தி பாஜக எதிர்க்கட்சியாக இயக்கம் நடத்தி வந்தது. 2 ஜி ஊழல்கள், நிலக்கரி இறக்குமதி ஊழல், சுரங்க ஒதுக்கீடு முறைகேடு, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மோசடி என அடுத்தடுத்து ஊழல்கள் காங்கிரஸைத் தாக்க, அதனை வைத்து தனது அரசியலை வேகப்படுத்தியது பாஜக. 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு சில மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பெற்ற வெற்றி பாஜகவுக்கு ஆறுதலாக அமைந்தது.

அத்வானி தலைமையில் நாடாளுமன்றத்தில் மட்டுமின்றி கட்சித் தலைவராக ராஜ்நாத் சிங் தலைமையிலும் போராட்டங்கள் பல நடந்தன. இவை யாவும் பாஜகவுக்கு பெரிய ஆதரவுத் தளத்தை உருவாக்கியது.

மோடி - அமித் ஷா கூட்டணி

வெறும் இந்துத்துவா அரசியல் மட்டும் வெற்றிக்குப் போதுமானதல்ல என்பதை பாஜக உணரத் தொடங்கியது. குஜராத்தில் மோடியின் வளர்ச்சி அரசியல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த சூழலில் அதனை இந்தியா முழுமைக்கும் பொருத்திப் பார்க்கும் புதிய அரசியலை கையில் எடுத்தது பாஜக. இதனால், 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை புதிய தலைமையின் கீழ் சந்திக்க பாஜக தயாரானது. மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி நடந்த தேர்தலில் பெரும் வெற்றி பாஜகவுக்குக் கிடைத்தது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு மீண்டும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் பொதுச்செயலாளராக அமித் ஷா நியமிக்கப்பட்டு அங்கு பணிக்கு அனுப்பப்பட்டார்.

தொகுதி வாரியாக ஜாதி, சமூகக் கட்டமைப்புக்கு ஏற்ப தேர்தலை எதிர்கொள்ளும் அமித் ஷாவின் செயல் திட்டம் பெரிய அளவில் பாஜகவுக்கு கைகொடுத்துது. குஜராத்தில் மட்டும் இருந்த வந்த மோடி என்ற வசீகரத்தை இந்தியா முழுமைக்கும் பாஜக கொண்டு சென்றது.

2014-ம் ஆண்டு மோடி அலையில் பாஜக 282 இடங்களில் பெரும் வெற்றி பெற்றது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்றது.

5 ஆண்டுகால ஆட்சியில் அடுத்தடுத்து நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்ற பாஜக, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற கோஷத்தை முன் வைத்தது. இருப்பினும் மோடி அரசின் செயல்பாடுகள், அரசு மீதான மக்களின் அதிருப்தி, எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு போன்றவை வரும் மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசு சந்திக்கும் பெரும் சவாலாக உள்ளது. அதேசமயம் வசீகரமான தலைமை, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை போன்றவை பாஜகவுக்குச் சாதகமாக உள்ளது.

எது எப்படியாகிலும், வெறும் இந்துத்துவ அரசியல் மட்டுமின்றி வளர்ச்சி அரசியல் தேவை என்ற 2014-ம் ஆண்டு பாஜக கருதியது. ஆனால் வளர்ச்சி அரசியல் மட்டும் போதாது, கூட்டணி அரசியலும் தேவை என்ற கட்டாயத்துடன் 2019-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

மக்களவைத் தேர்தல்தேர்தல் 2019பாஜகஜனசங்கம்பாஜக வளர்ந்த கதை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author