Published : 14 Apr 2019 06:40 PM
Last Updated : 14 Apr 2019 06:40 PM

காங்கிரஸின் ஏழைகளுக்கு மாதந்தோறும் வருவாய் திட்டம் ஊழலுக்கு வழிவகுக்கும்: பியூஷ் கோயல் சாடல்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஏழைகளுக்கு மாதந்தோறும் வருவாய் திட்டம் ஏமாற்று வேலை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், வறுமைக்கோட்டுக்கும் கீழே இருக்கும் ஏழைகளில் 20% பேருக்கு மாதந்தோறும் ரூ.6,000 என்று ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கும் திட்டம் இடம் பெற்று இருந்தது. இதுபோலவே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்த, ‘தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’ ஆண்டுக்கு 150 நாள்களுக்கு அமல்படுத்தப்படும், அனைவருக்கும் சுகாதார மேம்பாட்டுத் திட்டம், கல்வி, வீட்டுவசதி ஆகியவை வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பியூஷ் கோயல் கூறியதாவது:

காங்கிரஸ் தலைவர்கள் 3 தலைமுறைகளாக பெரிய வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றினர். ஆனால், ஊழல் செய்ததுடன், மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இந்திய மக்கள் புத்திசாலிகள். இனியும், பொய் வாக்குறுதிகளை கண்டு ஏமாறமாட்டார்கள்.

இந்த தேர்தலையொட்டி காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளனர். பொருளாதார ரீதியாக காங்கிரசின் 'நியாய்' திட்டம் பேரழிவு திட்டம். மக்களின் சம்பளம் மற்றும் வருமான அளவு குறித்த விவரம் ஏதும் இல்லாமல் அறிவித்துள்ளனர்.

இந்த திட்டம் சாத்தியம் இல்லாதது. பலூன் போல், இந்த அறிவிப்பு வெடித்துவிடும். பயனாளிகள் தேர்வில் பெருமளவு முறைகேடு நடக்கும். அக்கட்சியின் ஊழல் பட்டியலில் புதிதாக மேலும் ஒன்று சேரும். வெற்று கோஷங்கள் மூலம் மக்களை முட்டாள் ஆக்க முடியும் என காங்கிரஸ் நம்புகிறது. கவர்ச்சிகரமான அறிவிப்பு மூலம் மக்களை ஈர்த்து விட முடியாது என்பதை அக்கட்சி புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் விரும்புவது செயல்படும் அரசை தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x