

வங்கிகள் மீதான் ஆர்பிஐயின் ஆண்டுவாரி ஆய்வறிக்கை குறித்த தகவல்களை ஆர்டிஐ சட்டப்படி கேட்டால் கொடுக்க வேண்டும் என்று மத்திய ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமை அமர்வு மத்திய ரிசர்வ் வங்கி வங்கிகள் குறித்த தகவல்களையும் ஆர்டிஐ-யின் கீழ் அளிக்க தங்கள் கொள்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
ஏனெனில் ‘இது சட்டத்தின் கீழ் பிணைக்கப்பட்ட கடமையாகும்’ என்று நீதிமன்றம் ஆர்பிஐக்கு சுட்டிக்காட்டியது.
மேலும் தகவலுரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்பவர்களுக்கு தகவல்களை முறையாக அளிப்பதுதான் சரியானது, இதுதான் கடைசி வாய்ப்பு இன்னொரு முறை மறுத்தால் நீதிமன்றம் அதனை மிகவும் கண்டிப்புடன் அணுகும் என்று நீதிமன்றம் எச்சரிக்கையுடன் ஆரிபிஐக்கு அறிவுறுத்தியது.
“இதனை மீறினால் நிச்சயம் விஷயம் சீரியசாகப் பார்க்கப்படும்” என்று கண்டிப்பான குரலில் எச்சரித்துள்ளது.
கடந்த ஜனவரியில் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வங்கிகளில் நடத்திய ஆய்வின் ஆண்டறிக்கை குறித்து கேட்கப்பட்ட தகவலை ஆர்பிஐ மறுத்ததற்காக உச்ச நீதிமன்றம் ஆர்பிஐக்கு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவமதிப்பு நடைமுறையை மேலும் தொடர விரும்பாத உச்ச நீதிமன்றம் தற்போது ‘கடைசி வாய்ப்பு’ வழங்கியுள்ளது.
ஆர்பிஐ தன் தரப்பு வாதத்தில் வங்கி ஆய்வு ஆண்டறிக்கையில் இருதரப்பு நம்பிக்கைக்குப் பாத்திரமான தகவல் இருப்பதால் அதனை அளிக்க முடியாது என்று மறுத்துள்ளது.
ஆர்பிஐக்கு எதிராக ஆர்டிஐ சமூகச் செயல்பாட்டாளர் எஸ்.சி.அகர்வால் மேற்கொண்ட அவமதிப்பு வழக்கு விசாரணையான இதில் உச்ச நீதிமன்றம் ஆர்பிஐக்கு இது தொடர்பாக கண்டிப்புடன் எச்சரித்துள்ளது.