

குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது பில்கீஸ் பானு கும்பல் வன்முறைக்கு இலக்காகி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம், தங்க இடம், ஒரு வேலை ஆகியவை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குஜராத் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மிகக்கொடூராமான அந்தக் கலவரத்தில் பில்கீஸ் பானுவின் குடும்பத்தினர் 14 பேர் கொல்லப்பட்டனர். இவரது மூன்றரை வயது குழந்தையும் வன்முறைக்குப் பலியானது. கலவரத்தின் போது பில்கிஸ் பானு கருத்தரிந்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வின் முன்பு குஜராத் அரசு, இந்த வழக்கில் தவறு செய்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். முன்னதாக பில்கிஸ் பானு வழக்கறிஞர் தவறு செய்த அதிகாரிகள் தொடர்ந்து பணியில் நீடிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதே வழக்கில் பாம்பே உயர் நீதிமன்றத்தினால் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த ஐபிஎஸ் ஆபீஸர் பதவி இரண்டு ரேங்குகள் குறைக்கப்பட்டதாக குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. முன்னதாக பில்கிஸ் பானுவுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது, அது போதாது, தனக்கு மேலும் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஜனவரி 21, 2008-ல் சிறப்பு நீதிமன்றம் பானுவை பலாத்காரம் செய்து குடும்பத்தினர் 7 பேர கொன்றதற்காக 11 பேருக்குச் ஆயுள் தண்டனை அளித்தது. ஆனால் சில போலீஸ் அதிகாரிகள் மருத்துவர்கள் உட்பட 7 பேரை விடுவித்தது சிறப்பு நீதிமன்றம்.
ஆயுள் தண்டனை பெற்ற பலாத்கார குற்றவாளிகள் அனைவரும் தலா ரூ.55,000 பில்கிஸ் பானுவுக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது கோர்ட்.
பில்கிஸ் பானு இது குறித்து கூறிய போது, “எனக்கு நீதிதான் வேண்டும், பழிக்குப் பழி அல்ல. என் மகள்கள் பாதுகாப்பான இந்தியாவில் வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இப்போது இந்தத் தீர்ப்பின் மூலம் எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை பிறக்கிறது” என்றார்.