

ஏற்கெனவே உள்ளூர் மக்கள் தொகையுடன் கலந்து விட்ட 70,000 சட்டவிரோத அயல்நாட்டுக் குடியேறிகளை எவ்வாறு அடையாளம் காண்பீர்கள் என்று அசாம் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு பிரமாணப் பத்திரத்தில் மார்ச் 2018 வரை 91,609 அயல்நாட்டினர்கள் இருப்பதாகவும் இவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் என்றும் அயல்நாட்டினர் தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது என்றும் இதில் 72,486 பேர் மாயமாகியுள்ளனர் என்றும் உள்துறை கவலை தெரிவித்திருப்பதாகவும் கூறியிருந்தது.
இதனையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு, ’அறிவிக்கப்படாத அயல்நாட்டினர்’ ஏற்கெனவே உள்ளூர் மக்களுடன் கலந்திருப்பார்கள் என்று கூறியது.
“இப்படி அறிவிக்கப்படாத அயல்நாட்டினர் எத்தனை பேர்?” என்று அமர்வு வினவ, அசாம் அரசினால் பதில் ஒன்றும் கூற முடியவில்லை.
சட்டவிரோத அயல்நாட்டினர் என்று தீர்ப்பாயங்கள் அடையாளம் கண்ட நபர்கள் காணாமல் போயுள்ளனர், அல்லது அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
தற்போது, 829 பேர் அயல்நாட்டினர் என்றும் இதில் 115 பேர் ஏற்கெனவே சிறைத்தண்டனை நிறைவு செய்தவர்கள் இவர்கள் சிறை மற்றும் காவல் மையங்களில் இருந்தனர் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், “காவல் மையங்களிலும் இல்லை, சிறையிலும் இல்லை சட்ட விரோதக் குடியேறிகள் எங்கே? அவர்கள் தங்கள் நாட்டுக்கும் அனுப்பப்படவில்லை எனும்போது அவர்கள் எங்கு சென்றார்கள், எப்படி இவர்களை கண்டுபிடிப்பீர்கள்? கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என்று நீதியரசர் ரஞ்சன் கோகய் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பினார்.
மேலும் வந்தவர்கள் எந்த நாட்டினர் என்று விசாரிக்காமலேயே வங்கதேசத்துக்கு அவர்களைத் தள்ளிவிடுவீர்களா என்று அசாம் அரசின் கொள்கையையும் உச்ச நீதிமன்றம் கேள்விக்குட்படுத்தியது.
இதனை ஏற்றுக் கொண்ட உள்துறை அமைச்சகம், “அவர்கள் எந்தத் தகவலையும் தெரிவிப்பதில்லை, ஒரு குறிப்பிட்ட நபர் தெரிவித்தால்தான் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிய வரும், ஒரு இறையாண்மை பொருந்திய அரசாக சட்டவிரோதமாக இங்கு தங்கியிருப்பவர்களை அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்க இந்தியாவுகு உரிமை உண்டு, ஆனால் அதனை முறையற்ற விதத்தில் செய்ய முடியாது” என்ற கோர்ட்டின் வாதத்தை உள்துறை அமைச்சகம் ஏற்றது.
துஷார் மேத்தா கூறுகையில், மீண்டும் வங்கதேசத்துக்கே அனுப்பும் கொள்கை 2013-லேயே ரத்து செய்யப்பட்டது. இப்போதெல்லாம் தூதரக நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு ஒருவர் எந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறார் என்பதை அறிந்து அதன் பிறகு அவரை நாடுகடத்துவதுதான் நடந்து வருகிறது” என்றார்.’
அதற்கு மறுப்பு தெரிவித்து பதிலளித்த தலைமை நீதிபதி கோகய், “எந்த நாடு என்று தெரியாமலேயே அவர்களை அனுப்பி வந்தீர்கள், இப்போது நல்லவர்களாகி தூதரக நடைமுறைகளை கடைபிடிக்கிறீர்களோ” என்றார் காட்டமாக.
மேலும், “சட்டவிரோத குடியேற்கள் எவ்வளவு சதவீதத்தின் பேர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளீர்கள்? காவல் மையங்களில் பிடித்து வைத்திருப்பவர்களின் நிலை மேம்பட என்ன நடவடிக்கை மேற்கொண்டீர்கள்? இன்னும் எத்தனைக்காலம் தான் அவர்கள் அங்கு கழிக்க வேண்டும்?” என்று அடுக்கடுக்காக கேள்விக்கணைகளை தொடுத்தது.
ஆனால் இதற்கெல்லாம் பதில் அளிக்கும் அதிகாரம் கொண்ட மாநில தலைமைச்செயலர் கோர்ட்டில் இல்லாதது அமர்வுக்கு எரிச்சலைக் கிளப்பியது.
உடனே “தலைமைச் செயலர் எங்கே?” என்று நீதிபதி கேட்க, அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அவர் கடந்த முறை இங்குதான் இருந்தார். இம்முறை அவர் நேரில் வர வேண்டாம் என்று விலக்கு அளித்தது யார், அவர் வரத்தேவையில்லை என்று அவரே முடிவெடுப்பாரா” என்று கூறினார்.
இதற்கு தலைமை நீதிபதி, “அசாம் அரசு நீதிமன்றத்துடன் விளையாடி வருகிறது. உங்கள் பிரமாணப்பத்திரங்கள் எல்லாம் வியர்த்தமானது” என்றார் காட்டமாக.
அதற்கு துஷார் மேத்தா, ‘நாங்கள் எங்களால் இயன்றதைச் செய்கிறோம்” என்றார்.
“இதுதான் உங்களால் சிறப்பாகச் செய்ய முடிகிறதென்றால் எங்கல் அரசமைப்பு அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தி எங்களை உத்தரவு பிறப்பிக்க அனுமதியுங்கள்” என்றார் தலைமை நீதிபதி கோகய்.
கடைசியாக தலைமைச் செயலர் ஏப்ரல் 8ம் தேதி விசாரணைக்கு ஆஜராவார் என்று சொந்தமாக உறுதி அளித்தார் துஷார் மேத்தா.
சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர் என்ற செயல்பாட்டாளர் மாநிலத்தின் காவல் மையங்களின் மோசமான நிலையில் 4 சுவர்களுக்குள் அவர்கள் வாழ வேண்டியிருப்பதாக செய்த மனுவின் மீதான விசாரணைதான் இது.
இந்த மையங்களுக்கு பிடித்துச் செல்லப்பட்டவர்கள், காலக்கெடு முடிந்தும் அங்கேயே இருக்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கோர்ட் வேதனை தெரிவித்தது.