Last Updated : 23 Apr, 2019 12:00 AM

 

Published : 23 Apr 2019 12:00 AM
Last Updated : 23 Apr 2019 12:00 AM

தேர்தல் பணி முடிந்து ஓய்வெடுக்க சென்ற இடத்தில் பரிதாபம்: இலங்கை குண்டுவெடிப்பில் 5 மஜத நிர்வாகிகள் பலி? - உறவினர்கள் கொழும்பு விரைவு; கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிர்ச்சி

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் முடிந்து இலங்கைக்கு ஓய்வெடுக்க சென்ற கர்நாடகாவை சேர்ந்த மஜதவினர் 7 பேர் அங்கு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் கடந்த 18-ம் தேதி முதல்கட்ட மக்களவைத் தேர்தல் முடிந்ததால் மஜத நிர்வாகிகள் (தேவகவுடாவின் கட்சியினர்) 10-க்கும் மேற்பட்டோர், ஓய்வெடுப்பதற்காக கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு சென்றனர். கடந்த ஒரு மாதமாக தீவிரமாக தேர்தல் பணியாற்றியதால், ஓய்வெடுப்பதற்காக கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதிகளில் அவர்கள் தங்கினர்.

இதில் பெங்களூருவை சேர்ந்த ஹனுமந்த் ராயப்பா, ரங்கப்பா, புருஷோத்தம், நாகராஜ ரெட்டி மற்றும் சிக்கபள்ளாப்பூரை சேர்ந்த சுப்ரமண்யா, கேசவராஜ், சிவகுமார் ஆகிய 8 நிர்வாகிகள் கொழும்பில் உள்ள ஷாங்கிரி லா நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 15-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

அதே நேரத்தில் இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 9 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் சிக்கியோரில் 10-க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “இலங்கைக்கு சுற்றுலா சென்ற மஜதவை சேர்ந்த 7 பேரும் அங்கு நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு பிறகு மாயமானது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 2 பேர் அந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து பேசியுள்ளேன். அங்கு மாயமாகியுள்ளோரை வெளியுறவுத்துறை உடனடியாக மீட்டுத்தர வேண்டும்''என குறிப்பிட்டுள்ளார்.

தேவகவுடாவுக்கு நெருக்கம்

இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ''மஜதவை சேர்ந்த ஹனுமந்த் ராயப்பா, ரங்கப்பா ஆகிய இருவரும் குண்டுவெடிப்பில் பலியாகி விட்டனர்''என குமாரசாமிக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனிடையே மஜத எம்எல்ஏ விஸ்வநாத்தின் மருமகனும், யலஹங்கா பகுதி மஜத செயலாளருமான புருஷோத்தம் மருத்துமனையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். அடையாளம் காணப்படாத நிலையில் வேறு இருவரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் மொத்தமாக மஜதவை சேர்ந்த 5 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே இலங்கைக்கு சுற்றுலா சென்ற மஜதவினரின் உறவினர்கள் அவர்களை தேடி கொழும்புக்கு விரைந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கியவர்கள் முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால் மஜத எம்எல்ஏ விஸ்வநாத், எம்எல்சி மஞ்சுநாதா ஆகியோரும் அங்கு சென்று, விபத்தில் சிக்கியோரை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். பெங்களூரு, சிக்கபள்ளாப்பூர் பகுதிகளை சேர்ந்த மஜத நிர்வாகிகள் 7 பேர் மாயமாகியுள்ளதால், அவர்களின் உறவினர்களும், ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x