Last Updated : 04 Apr, 2019 09:02 AM

 

Published : 04 Apr 2019 09:02 AM
Last Updated : 04 Apr 2019 09:02 AM

குமாரசாமி வாகனத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை: மஜத மூத்த தலைவர் கண்டனம்

மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதியில் முதல்வர் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக குமாரசாமி நேற்று பெங்களூருவில் இருந்து ஹாசனுக்கு தனது சொந்த காரில் சென்றார்.

சென்ன ராயப்பட்டினம் சோதனைச் சாவடி அருகே சென்றபோது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரிகளும், போலீஸாரும் குமாரசாமியின் வாகனத்தை நிறுத்தினர். காரில் முதல்வர் இருப்பதை அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் குமாரசாமியிடம் சென்று, "உங்களது வாகனத்தை சோதனையிட வேண்டும்'' எனக்கூறவே, அவர் காரில் இருந்து இறங்கினார். இதையடுத்து அதிகாரிகள் குமாரசாமியின் வாகனத்தை சோதனையிட்டனர். பின்னர் அந்த வாகனத்தை அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குமாரசாமி கூறும்போது, "தேர்தல் அதிகாரிகள் தங்களது கடமையை செய்திருக்கிறார்கள். இதில் எனக்கு வருத்தமோ, கோபமோ இல்லை" என்றார். இதனிடையே அவரது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் (மஜத) மாநில தலைவர் விஸ்வநாத் கூறும்போது, "முதல்வரின் வாகனத்தை நிறுத்தியதைப் போல பிரதமர் மோடியின் வாகனத்தையோ, பாஜக தலைவர் அமித் ஷாவின் வாகனத்தையோ நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்வார்களா?''என கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x